HT OTT SPL: பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனையை இந்தியா தடுத்தது இப்படிதான்! உண்மைச் சம்பவங்களை தழுவி உருவான படம்
OTT: 1974ம் ஆண்டு மே 18ம் தேதி ஆபரேஷன் ஸ்மைலிங் புத்தா என்ற பெயரில் இந்தியா தனது முதல் அணு ஆயுத சோதனையை ராஜஸ்தான் மாநிலம், பொஹ்ரானில் வெற்றிகரமாக நிகழ்த்தியது.
மிஷன் மஜ்னு என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்தி-மொழி ஸ்பை த்ரில்லர் திரைப்படமாகும். சாந்தனு பாக்சி இயக்கியிருக்கிறார். ரோனி ஸ்க்ரூவாலா, அமர் புட்டாலா மற்றும் கரிமா மேத்தா ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்தனர். சித்தார்த் மல்ஹோத்ரா நடித்த இந்தப் படத்தின் திரைக்கதை 1971 இல் இந்திய-பாகிஸ்தான் போருக்கு முன்னும் பின்னும் நடைபெறும் கதைக்களத்தில் அமைந்துள்ளது. ராஷ்மிகா மந்தனா, பர்மீத் சேத்தி, ஷரிப் ஹாஷ்மி, குமுத் மிஸ்ரா மற்றும் ரஜித் கபூர் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
முதலில் 2022ம் ஆண்டு மே 13 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, பின்னர் அதே ஆண்டு ஜூன் 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதியில், படத்தின் திரையரங்கு வெளியீடு ரத்து செய்யப்பட்டு, 2023ம் ஆண்டு ஜனவரி 20 அன்று நெட்ஃபிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டது.
கதை என்ன?
அமன்தீப் சிங் என்ற ஐபிஎஸ் அதிகாரி 1971இல் RAW ஏஜெண்ட்டாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கு தாரிக் ஹுசைன் என்ற பெயரில் அவர் வாழ்கிறார். ஒரு தையல் கடையில் வேலைக்குச் சேரும் அவர், அக்கடை உரிமையாளரின் உறவினரான Nasreen-ஐ காதலித்து நிக்கா செய்து கொள்கிறார்.
1974ம் ஆண்டு மே 18ம் தேதி ஆபரேஷன் ஸ்மைலிங் புத்தா என்ற பெயரில் இந்தியா தனது முதல் அணு ஆயுத சோதனையை ராஜஸ்தான் மாநிலம், பொஹ்ரானில் வெற்றிகரமாக நிகழ்த்துகிறது.
பிரதமராக இந்திரா காந்தி அப்போது பதவி வகித்து வருகிறார்.
இதன் காரணமாக அணுசக்தி பொறியாளர் அப்துல் காதீர் கானின் உதவியுடன் பாகிஸ்தான் ரகசியமாக சொந்தமாக அணு ஆயுதத்தை தயாரிக்க விரைகிறது.
இதை ஏஜெண்ட்களின் உதவியுடன் டெல்லியில் உள்ள RAW தலைமையகம் அறிந்து கொள்கிறது. இத்தகவலையும் பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் எடுத்துச் செல்கிறார் RAW தலைவர்.
உடனடியாக, இந்திரா காந்தி, அந்த இடத்தை கண்டுபிடிக்க உத்தரவிடுகிறார். அந்த இடத்தை கண்டுபிடிக்கும் பணி அமன்தீப்பிடம் வருகிறது. இதற்கு மிஷன் மஜ்னு என பெயர்சூட்டப்படுகிறது.
அதேநேரம், இந்தியாவில் ஆட்சி மாற்றம் வந்து மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவியேற்கிறார்.
அவர் பாகிஸ்தானுடன் அமைதியைப் பேண விரும்புகிறார். இதனால், இந்த மிஷனுக்கு சற்று தடங்கல் ஏற்படுகிறது.
ஆனாலும், பாகிஸ்தானில் இருக்கும் சீனியர் ஏஜெண்ட்களுடன் இளம் உளவாளி அமன் அந்த இடத்தை எப்படி தெரிந்து கொண்டு இந்தியாவுக்கு தகவல் அளிக்கிறார் என்பதே பரபரப்பான திரைக்கதை.
ஒரு ஸ்பை த்ரில்லர் கதைக்கு தேவையான அனைத்து சமாஜாரங்களும் இந்தப் படத்தில் உள்ளது. சண்டைக் காட்சிகள், புத்திக் கூர்மை நிறைந்த காட்சிகள், இக்கட்டான சூழ்நிலைகளில் சமயோஜிதமாக செயல்படுவது என அனைத்தும் இந்தப் படத்தில் பார்க்கலாம்.
பார்வைத் திறனற்றவராக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். அவர் இறுதிக்கட்சியில் என்ன நடக்கிறது என புரியாமல் துபாய் செல்லும் காட்சி கண்கலங்க வைக்கும். கர்ப்பமாக இருக்கும்போது கணவரிடம் அன்பைப் பொழியும்போதும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் ராஷ்மிகா.
அமன்தீப் சிங்காக சித்தார்த் மல்ஹோத்ரா அட்டகாசமாக நடிப்பை வழங்கியிருக்கிறார். சலூன் காட்சி, பாகிஸ்தான் உயரதிகாரி வீட்டுக்கு சென்று அவரிடம் உரையாடி தகவலை கறக்கும் காட்சி, மனைவியிடம் அன்பை காட்டும் காட்சி, தன்னை விமர்சிக்கும் RAW உயரதிகாரியிடம் கணிவுடன் பேசும் காட்சி, ரயில் சண்டை காட்சி என பல காட்சிகளில் சிறந்த நடிப்பால் மனதில் பதிகிறார் சித்தார்த் மல்ஹோத்ரா.
இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கிறது. தேசப்பக்தியைத் தூண்டு படங்களின் வரிசையில் மிஷன் மஜ்னு நிச்சயம் இடம்பெறும். இந்தப் படம் நெட்பிளிக்ஸில் தமிழிலும் காண முடியும்.