HT Cinema Spl:"prostitution சட்டப்பூர்வமானதாக வேண்டுமா?"-விவாதத்தை எழுப்பிய படம்
Gangubai Kathiawadi: இந்தியாவில் பாலியல் தொழில் என்றால் அனைவருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது மும்பை சிவப்பு விளக்கு பகுதிதான்.
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பாலியல் தொழிலை ஒரு தொழிலாக அங்கீகரித்து உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை போலீசார் துன்புறுத்தக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது. பாலியல் தொழிலாளர்கள் மற்ற குடிமக்களைப் போலவே அதே சலுகைகள் மற்றும் வசதிகளைப் பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்ற வழங்கி இருந்தது.
அதேநேரம், பாலியல் சட்டப்பூர்வமானதாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் தொழில் (prostitution) IPC-இன் கீழ் பின்வருவனவற்றை சட்டவிரோதமாக்குகிறது:
விபச்சார சேவைகளை பகிரங்கமாக கோருதல்
ஹோட்டல்களில் விபச்சார நடவடிக்கைகள்
பாலியல் தொழிலாளியை ஏற்பாடு செய்வதன் மூலம் விபச்சாரம்
வாடிக்கையாளருடன் பாலியல் செயலை ஏற்பாடு செய்தல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனினும் தற்போதும் சட்டவிரோதமாக இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் பாலியல் தொழில் நடந்து வருகிறது.
சமீபத்தில் சென்னையில் கூட சில ஹோட்டல்களில் ரெய்டு நடத்தி போலீஸார் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர் என்பதை செய்தித்தாள்களில் நாம் வாசித்திருப்போம்.
இந்தியாவில் பாலியல் தொழில் என்றால் அனைவருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது மும்பை சிவப்பு விளக்கு பகுதிதான்.
காமதிபுரா என்றழைக்கப்படும் அந்தப் பகுதி இன்றும் மும்பை புறநகரில் அமைந்துள்ளது.
இங்கு 1960களில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்காக குரல் கொடுத்த பாலியல் தொழிலில் ஈடுபட்ட கங்குபாய் பற்றி Mafia Queens of Mumbai என்ற பெயரில் Hussain Zaidi நூல் ஒன்றை எழுதினார்.
அந்த நூலின் அடிப்படையில் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி கங்குபாய் காதியாவாடி என்ற படத்தை இயக்கினார்.
இந்தப் படத்தில் கங்குபாய் கதாபாத்திரத்தில் அலியா பட் நடித்திருந்தார்.
நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கங்குபாய், திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு காதலின் பேச்சை நம்பி மும்பைக்கு ரயில் ஏறுகிறார். ஆனால், காதலன் அவரை காமதிபுராவில் விற்றுவிட்டு ஓடிவிடுகிறான்.
அதன் பிறகு, அங்கிருந்து தப்பிக்க முடியாமல் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார். கொஞ்ச காலத்திலேயே அவர் பல பாலியல் தொழிலாளர்களை நிர்வகித்து பாதுகாக்கும் பொறுப்பு வருகிறது.
அதன் பிறகு, பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை படிக்க வைக்கிறார். அவர்களின் நலனுக்காக பல முயற்சிகளை எடுக்கிறார்.
அப்போது பிரதமராக இருந்த நேருவை சந்தித்து பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களின் நலனுக்காக கோரிக்கை வைக்கிறார்.
அப்போது அவரிடம் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமானதாக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை முன்வைப்பதாக படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கங்காவாக பிறந்து ஏமாற்றத்தாலும், துரோகத்தாலும் கங்குபாயாக மாறும் கதாபாத்திரத்துக்கு அலியா பட் உயிர் கொடுத்திருக்கிறார்.
அலியா பட்டை மற்ற படங்களில் பார்த்ததற்கு இந்தப் படத்தில் பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் தெரியும்.
நடிப்புக்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்.
குறிப்பாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் காட்சியில் கலங்க வைக்கிறார்.
காமதிபுராவில் நடக்கும் தேர்தலில் ராஸி பாயை எதிர்க்கும் காட்சியில் துணிச்சல் மிக்க பெண்ணாகவும், காதலனை வேறொரு பெண்ணுக்கு திருமணம் செய்துகொடுக்கும் காட்சியிலும், மேடையில் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் பேசும் காட்சியிலும் அசத்தல் நடிப்பை வழங்கியிருக்கிறார் அலியா பட்.
கரீம் லால் கதாபாத்திரத்தில் சிறிது நேரமே வந்தாலும் நடிகர் அஜய் தேவ்கன் மனதில் பதிகிறார்.
பத்மாவத் படத்தை போலவே இந்தப் படத்துக்கு பல எதிர்ப்புகளை சம்பாதித்தார் சஞ்சய் லீலா பன்சாலி. ஆனால், தடைகளை தகர்த்தெறியும் இவரது கதாபாத்திரங்களைப் போலவே இந்தப் படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்து ரிலீஸும் செய்து சாதித்துக் காட்டியுள்ளார்.
சுதீப் சாட்டர்ஜியின் கேமிரா ஒவ்வொரு பிரேமையும் செதுக்கியிருக்கிறது. கலை வடிவமைப்பும் 1960 காமதிபுராவை கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
"பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் சக மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும். அவர்களின் தொழிலை சட்டப்பூர்வமானதாக்க வேண்டும்" என்பது போன்ற விவாதங்களை முன்வைத்துள்ளது இந்தப் படம்.
இந்தப் படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.
டாபிக்ஸ்