தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Hbd Tm Krishna: Carnatic Musician Tm Krishna's Birthday Today

HBD TM Krishna: ‘கர்நாடக இசையின் கலகக்காரன்…!’ டி.எம். கிருஷ்ணா செய்த சம்பவங்கள்!

Kathiravan V HT Tamil
Jan 22, 2024 05:15 AM IST

“TM Krishna: கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் சமூக பணிகளுக்காக ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் மகசேசே விருது அளிக்கப்பட்டுள்ளது”

கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா
கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்பும் வளர்ப்பும் 

1976 ஜனவரி 22ஆம் தேதி பிறந்த டி.எம்.கிருஷ்ணாவின் தந்தை டி.எம்.ரங்காச்சாரி ஒரு தொழிலதிபர், இவரது தாய் பிரேமா கலாபீடம் எனும் பெயரில் இசைப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். தனது ஆரம்பகால இசையை சீதாராம சர்மாவிடம் பெற்ற கிருஷ்ணா, பின்னர் செங்கல்பட்டு ரெங்கநாதன் மற்றும் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரிடம் இசையை கற்றுத்தேர்ந்தார்.

இசைப்பயணம் 

90-களின் தொடக்கம் அவரது இசைப்பயணத்தில் அற்புதமான தொடக்கமாக அமைந்தது, ஆண்டுகள் கூடக்கூட அவரின் இசைப்பரிமானங்களும் கூடிக்கொண்டே சென்றது. ஒரு இசைக்கலைஞன் என்ற அடையாளத்திற்குள் மட்டும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளாமல், எழுத்தாளராகவும் சமூக ஆராய்ச்சியாளராகவும் பரிணமித்து சமூக அக்கறையை வெளிப்படுத்தியது பலரின் கவனத்தை ஈர்த்தது.

எழுத்துப்பணி 

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட டி.எம்.கிருஷ்ணாவின் A Southern Music - The Karnatik Story என்ற புத்தகம் கர்நாடக இசையின் அழகியலையும், சமூக அரசியலையும் தெளிவாக பிரித்துக்காட்டுவதாய் அமைகிறது. அவரின் இந்த நூலுக்காக புனைவுகள் அல்லாத பிரிவின் சிறந்த நூலாக கடந்த 2014ஆம் ஆண்டு டாடா இலக்கிய விருது வழங்கப்பட்டது.

கர்நாடக இசையும் மாட்டுத்தோலும்…!

2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரீஷேப்பிங்க் ஆர்ட் என்ற புத்தகம், சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய வேறுபாடுகளை அலசுகிறது. கர்நாடக இசைக்கச்சேரிகளில் தவிர்க்க முடியாததாக மாறி போன மாட்டுத்தோலினை கொண்டு உருவாக்கப்படும் மிருந்தங்கத்தையும் அதனை உருவாக்கும் சமூகத்தை பற்றியும் பேசும் செபாஸ்டியன் அண்ட் சன்ஸ் என்ற புத்தகம் கர்நாடக இசையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மகசேசே விருது

டி.எம்.கிருஷ்ணாவின் பேச்சை முதன்முதலாக கேட்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ’’பொதுவாக கர்நாடக இசைகலைஞர்கள் அதிகம் பேசுவதில்லை. பேசினாலும் அதிகம் சுவாரஸ்யமாக இருப்பதில்லை. ஆனால் இவர் விதிவிலக்கு, கர்நாடக இசையின் வரலாற்றை நுட்பமாக ஆராய்ந்திருக்கிறார், இன்றைய சபா கச்சேரிகளின் நிலையைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்’’ என குறிப்பிடுகிறார். கலைக்குள் சமூக நலத்தை உட்புகுத்தி வருவதாக ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் மகசேசே விருது டி.எம். கிருஷ்ணாவுக்கு அளிக்கப்பட்டது. கர்நாடக இசை களத்தில் சமத்துவத்திற்காக போராடும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்ததுகள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.