FightClub Review: ‘ஃபைட் கிளப்.. சண்டை சத்தமா? வழக்கமான யுத்தமா?’ முதல் விமர்சனம் இதோ!
Fight Club Review: இயக்குநர் அப்பாஸ் தான் சொல்ல வந்த கதையை மேக்கிங்கில் சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்தது பாராட்டுக்கு உரியது
உறியடி படம் மூலம் அறியப்பட்ட விஜய்குமார் நடிப்பில், இயக்குநர் அப்பாஸ் ஆர்.ரஹ்மத் இயக்கத்தில், வரும் டிசம்பர் 15 ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ஃபைட் கிளப்.
கோவிந்த் வசந்தா இசையமைத்து இருக்கும் இந்த படத்தில் கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ், அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
கதையின் கரு
பாக்ஸிங்கை உயிராக நினைத்து வாழும் பெஞ்சமினுக்கு, வடசென்னைக்காரன் என்ற அடையாளம், அவன் மேலே செல்வதற்கு முட்டுக்கட்டையாக நிற்க, திறமை இருந்தும் சோபிக்காமல் போகிறார்.
இதில் மனம் உடைந்த பெஞ்சமின், தான் இழந்ததை தான் ஊர் இழக்கக்கூடாது என்று எண்ணி தன்னுடைய ஊருக்காக வடசென்னை ராஜன் போல வாழ்ந்து வருகிறார். ஆனால் அவர் தம்பி ஜோசப்போ கஞ்சா விற்கும் கிருபாவுடன் சேர்ந்து கொண்டு ஊருக்குள் கஞ்சா விற்று கொண்டு இருக்கிறான்.
இதை பெஞ்சமின் பலமுறை கண்டித்தும் தம்பி கேட்ட பாடில்லை. இதனிடையே, சம்பவம் ஒன்றில், தம்பியையும் கிருபாவையும் நடுரோட்டில் வைத்து பெஞ்சமின் பொளந்து கட்ட,இனி வேலைக்கு ஆகாது என்று, அண்ணனை கிருபாவுடன் சேர்ந்து தீர்த்து கட்டுகிறான் தம்பி ஜோசப்.
சம்பவத்தில் யார் ஜெயிலுக்கு போவது என்ற பேச்சு வர ஜோசப்பை ஜெயிலுக்கு போக சொல்லும் கிருபா ஒரு வாரத்தில் வெளியே எடுத்து விடுவதாக நம்பிக்கை கொடுக்கிறான்
ஆனால் சொன்ன வாக்கை கிருபா காப்பாற்ற வில்லை. இதனையடுத்து வெளியே வரும் ஜோசப் செய்தது என்ன, இதில் செல்வா எப்படி சம்பந்த படுகிறான் என்பது மீதி கதை. செல்வாவாக நடித்து இருக்கும் விஜயகுமார் வட சென்னை இளைஞனாக துடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவருக்கு ஜோடியாக நடித்த மோனிஷா மோகன் எதற்கு வந்தார் என்றே தெரியவில்லை. இருவருக்கும் இடையேயான காதலிலும் பெரிதான பிடிப்பு இல்லை. ஜோசப்பாக நடித்து இருக்கும் அவினாஷின் நடிப்பு மரண மிரட்டல்.
இயக்குநர் அப்பாஸ் தான் சொல்ல வந்த கதையை மேக்கிங்கில் சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்தது பாராட்டுக்கு உரியது. சண்டை காட்சிகளிலும், படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்களிடமும் இருந்த உண்மை தன்மை, டத்தை நம்மை நெருக்கமாக கொண்டு சென்றது.
ஆனால்,மேக்கிங்கில் இருந்த சுவாரசியம் அவர் எடுத்து கொண்ட கதையில் இல்லாமல் போனது படத்திற்கு பெரிய பலவீனமாக அமைந்து விட்டது. படத்தொகுப்பு கவனிக்கத்தக்கதாக இருந்தது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா காட்சிகளை முடிந்த அளவு நம் மனதில் ஒட்ட வைக்க பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார்
ஆனால் துருதிஷ்டம் கதையில் ஆழமில்லாத காரணத்தால், அவரது இசை நமக்கு ஒரு இரைச்சல் போலவே தெரிகிறது. வடசென்னையில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து பல படங்கள் இதே கதைகளத்தில் இதைவிட சுவாரசியமாக வந்த காரணத்தினால் ஃபைட் கிளப் படத்தை பெரிதாக ரசிக்க முடியவில்லை என்பதை மறுக்க முடியாத உண்மை.
டாபிக்ஸ்