Christopher Nolan: ‘தத்ரூபத்தின் உச்சம்.. “ஓப்பன் ஹெய்மர் படத்தில் சிஜி காட்சிகள் இல்லை” - அதிரவைத்த நோலன் பேட்டி!
இரண்டாம் உலகப்போரின் போது அணுகுண்டு தயாரிப்பதற்கு உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஓப்பன் ஹெய்மரை மையப்படுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.
ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான ‘மெமன்டோ’, ‘ தி ப்ரஸ்டீஜ்’, ‘இன்செப்ஷன்’, ‘இண்டெர்ஸ்டெல்லார்’ உள்ளிட்ட திரைப்படங்கள் உலகம் முழுவதும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
இவரது இயக்கத்தில் கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு ‘டெனெட்’ திரைப்படம் வெளியானது. இந்தப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ஓப்பன்ஹெய்மர்’.
இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஓப்பன் ஹெய்மரின் வாழ்க்கை கதை!
இரண்டாம் உலகப்போரின் போது அணுகுண்டு தயாரிப்பதற்கு உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஓப்பன் ஹெய்மரை மையப்படுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தில் கதையின் நாயகனாக ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடித்திருக்கிறார்.
இவருடன் ‘அயர்மேன்’ படப்புகழ் ராபர்ட் டெளனி ஜூனியர், மேட் டேமன், எமிலி பிளன்ட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தத்திரைப்படம் இம்மாதம் ஜூலை 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தப்படத்தில் சிஜிஐ பயன்படுத்தவில்லை என்று இப்படத்தின் இயக்குநர் நோலன் பேசியிருக்கிறார்.
நோலன் பேட்டி!
இது குறித்து பேசிய அவர், “ ஒரு அறையில் உட்கார்ந்து இருக்கும் மனிதர்கள் எடுத்த இது போன்ற பயங்கரமான முடிவுகளே நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்தை வரையறுத்து இருக்கிறது. என்ன ஒரு வியப்பான நிகழ்வு. அந்த இடத்திற்கு நான் பார்வையாளர்களை கொண்டு செல்ல வேண்டும் நினைத்தேன். இந்தப்படத்தில் சிஜிஐ காட்சிகளே இல்லை” என்று பேசினார்.
இந்தப்படம் குறித்து பேசிய நடிகர் சிலியன் மர்பி ராபர்ட் ஓப்பன்ஹெய்மரை பற்றி ஏகப்பட்ட தகவல்கள் இருக்கின்றன. ஒரு நடிகராக என்னுடைய வேலை அந்த கதாபாத்திரத்தின் மனிதநேயம், உணர்ச்சி, சிக்கல்தன்மை மற்றும் ஒழுக்கத்தன்மையை பின்பற்றுவதே ஆகும். அதனால் நான் பெரிதாக இயற்பியலைக் கற்றுக்கொள்வதில் கால விரயம் செய்ய வில்லை” என்று பேசியிருக்கிறார்
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அணு ஆயுத சோதனையை கிராபிக்ஸ் மூலம் காட்சிபடுத்துவது சரியாக இருக்காது என்பதனால் படத்திற்காக நிஜத்திலேயே அணு ஆயுத சோதனையை தத்ரூபமாகப் காட்சிப்படுத்தி இருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.