‘மகள்களுக்கு செக்ஸ் சொல்லிக் கொடுங்க’ -விஜி சந்திரசேகர் ‘நச்’ பேட்டி!
Viji Chandrasekhar: என் மகள் கல்லூரியில் சேரும் போது உட்கார வைத்து பேசினேன். செக்ஸ் பற்றி பேசினேன், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பேசினேன்
குணச்சித்திர நடிகையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் விஜி சந்திரசேகர், தன்னுடைய மகளையும் சினிமா களத்தில் இறக்கியிருக்கிறார். ஒழுக்கத்திற்கு பெயர் போன நடிகையாக வலம் வரும் விஜி, தன்னுடைய மகள்கள் வளர்ப்பில், தான் காட்டிய நடவடிக்கைகள் மற்றும் யோசனைகள் குறித்து, சிறப்பான பேட்டி ஒன்றை இணையதளத்திற்கு அளித்துள்ளார். இதோஅந்த பேட்டி:
‘‘எண்ணம் போல் வாழ்க்கை. நல்ல எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டால், வாழ்க்கையும் அப்படி தான் இருக்கும். ஆந்திராவில் பிறந்தேன், வளர்ந்தது தமிழ்நாடு. என் பெண் குழந்தைகளை நான் தைரியமாக வளர்த்திருக்கிறேன். அதே நேரத்தில் அவர்களுக்கு நிறைய வேல்யூ சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அது கட்டாயம் சொல்லித் தர வேண்டும்.
பசங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கேன். ஆனால், அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த நான் அனுமதித்தது இல்லை. ‘ஸ்லீப் ஓவர்’ என்று சொல்கிறார்கள். எனக்கு அந்த வார்த்தையே பிடிக்கவில்லை. ‘வீக் எண்ட் ஸ்லீப் ஓவர்’ என்று சொல்லிக் கொண்டு, ஒவ்வொரு வாரமும், இவங்க அங்கே போவாங்களாம், அவங்க இங்கே வருவாங்களாம்!
எங்கே போனாலும், 6 மணிக்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும். இது கட்டாயம். ஏன் சொல்கிறேன் என்றால், அவர்கள் குழந்தைகள். அவர்களுக்கு நல்லது, கெட்டது தெரியாது. 10 குழந்தைகளில் ஏதாவது ஒரு குழந்தை தவறான எண்ணத்தில் இருந்தால், இந்த 9 குழந்தைகளும் கெட்டுவிடும்.
தவறான எண்ணம் கொண்ட குழந்தையை நான் தப்பாக கூற முடியாது. அதே நேரத்தில் நம் குழந்தைகள் அதற்கு உடன்பட்டுவிடுவார்கள் என்பதால் நான் அனுமதிப்பதில்லை. சிறை கைதிகள் மாதிரி வளர்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், எது எது கூடாது என்பதை நாம் திறந்து பேசிவிட வேண்டும்.
என் மகள் கல்லூரியில் சேரும் போது உட்கார வைத்து பேசினேன். செக்ஸ் பற்றி பேசினேன், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பேசினேன், பல விசயங்களை ஓப்பனா பேசினேன். அந்தந்த நேரத்தில் அது அது நடக்க வேண்டும் என்று எடுத்துரைத்தேன்.
இளம் வயதில் அழகான பையனை பார்த்தால் மனசு அலைபாயும், ஈர்ப்பு வரும், விருப்பம் வரும். ஆனால் அதனால் பிரயோஜனம் கிடையாது என்று அவளிடம் கூறினேன். அதெல்லாம் மனதில் ஏற்றக் கூடாது என்று கூறினேன். மருத்துவம் என்பது கஷ்டமான படிப்பு, அதில் கவனம் செலுத்த வேண்டும். மனசில் வேறு எதையும் ஏற்றக் கூடாது என்று கூறினேன்.
ஒரு பையன் நம்மை பார்க்கிறான் என்றால், ‘இவன் எதற்காக நம்மை பார்க்கிறான்? இவன் நல்லவனா? இவன் இதற்காக நம்மை நாடுகிறான் என்கிற கேள்வியை உனக்குள் கேட்டுக்கொள் என்று கூறினேன். உனக்கு அந்த பையன் பிடித்திருந்தால் கூட, மனதில் வைத்துக்கொள்.
படிப்பு முடிக்கும் 6 ஆண்டு வரை காதல் என்கிற எண்ணத்தை மனதில் வைக்காதே என்று கூறினேன். 20 வயதில் படிப்பை முடிக்கும் போது, உன்னிடம் யாராவது காதலை சொன்னாலோ? இல்லை, நீ யாரிடமாவது காதலை சொன்னாலோ, அப்போது நீ சரியான முடிவை எடுக்க முடியும்.
லஸ்ட், செக்ஸ் எல்லாத்துக்கும் ஒரு நேரம் இருக்கிறது. திருமணம் என்று ஒன்று வரும், அப்போது அது புனிதமான உறவாக இருக்கும். அந்த உறவுக்குள் வரும் போது, அதை நீ நினைக்கலாம் என்பதை நான் சொல்லிக் கொடுத்ததால், அது அவர்களுக்குள் உட்கார்ந்துவிட்டது. சரியான தொடுதல், தவறான தொடுதல் குறித்து அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தேன்.
சினிமாவுக்கு ஒரு கெட்ட பெயர் இருக்கிறது. நடிகை என்றாலே, தவறான ஒரு பெயர் என்பது ஒரு சிலரால் உருவானது. ஒரு நடிகைக்கு வேறு பிறந்திருப்பதால், தப்பான கண்ணோட்டத்தில் நம்மை எளிதில் அணுகுவார்கள். என்பதால் இன்னும் விழிப்போடு இருக்க வேண்டும் என்று என் மகள்களிடம் கூறியிருக்கேன்,’’
என்று அந்தபேட்டியில் விஜி சந்திரசேகர் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்