Srilekha Rajendran: ‘ஆண் துணை தேவைப்பட்டது’ ஸ்ரீலேகா ராஜேந்திரன் ஓப்பன்!
நிச்சயித்த பின் தான், காதலித்தோம். காதல் என்றால் இப்போது மாதிரி இல்லை. அப்போ நான் டப்பிங்கில் பயங்கர பிஸியா இருந்தேன்.
வெள்ளித்திரை, சின்னத்திரை, டப்பிங், நிகழ்ச்சி தொகுப்பாளர் என சினிமாவில் உள்ள அத்தனை துறைகளிலும் முத்திரை பதித்தவர் ஸ்ரீலேகா ராஜேந்திரன். அதே துறையைச் சேர்ந்த ராஜேந்திரனை திருமணம் செய்த ஸ்ரீலேகா இன்றும், சிறந்த குணச்சித்திர நடிகையாகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி இதோ:
‘‘நடிகையாக ஆரம்பித்தாலும், சன் டிவி தொடங்கும் போது ‘ஜோடி பொருத்தம்’ என்கிற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினேன். அந்த நிகழ்ச்சி சூப்பர், டூப்பர் ஹிட். பாட்டு மட்டும் எனக்கு பாடத் தெரியாது, மற்ற படி எல்லா துறையிலும் பணியாற்றி விட்டேன்.
என் குரலில் இளமை இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். நிறைய மேனேஜர்கள் எனக்கு போன் செய்து, ‘மேடம், உங்க அம்மாவை கூப்பிடுங்க’ என்று கேட்பார்கள். ‘எந்த அம்மாவை?’ என்று கேப்டேன், என் பெயரை கூறுவார்கள், ‘நான் தாங்க அது ’ என்பேன். ‘சின்ன பொண்ணு பேசுற மாதிரி இருக்கு மேடம்’ என்று அதன் பின் கூறுவார்கள்.
என் கணவர் ராஜேந்திரன், ரொம்ப ஜாலி டைப். ஆன்மிகத்தில் அவர் அதிக ஆர்வம் கொண்டவர். எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை. அவர்கள் தான், அனைத்தையும் படித்து எனக்கு சொல்வார். நாங்கள் ஒரே துறையில் இருந்தாலும், எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான். என் அப்பா திடீரென விபத்தில் இறந்ததால், ஆண் துணை தேவைப்பட்டது. என் தம்பி சின்னப் பையனா இருந்தான். அப்போ, என் கணவர் ராஜேந்திரன் தான், தானா வந்து வாழ்க்கை தருவதாக கூறினார்.
நிச்சயித்த பின் தான், காதலித்தோம். காதல் என்றால் இப்போது மாதிரி இல்லை. அப்போ நான் டப்பிங்கில் பயங்கர பிஸியா இருந்தேன். விஜய்சாந்தி, ஜெயசுதா, ராதிகா எல்லாருக்கும் நான் தான் டப்பிங். இதற்கிடையில் எங்கே காதலிப்பது. நேரமே இருக்காது.
இப்போ, சமுதாயத்தில் நிறைய பிரச்னைகள் போகுது. குறிப்பாக பாலியல் தொல்லை, அதுவும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகளை படிக்கும் போதே, மனதிற்கு பாராமா இருக்கிறது. திருமணத்திற்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரு வயது இருக்கிறது.
அப்படி இருக்கும் போது சின்ன குழந்தைகளை எப்படி மனசு வருது? அவர்கள் எப்படி துடிப்பார்கள்? முன்பெல்லாம் இது இல்லை. இப்போ தான் தலை விரித்து ஆடுகிறது. ஒரு தாயா எனக்கு பயங்கர வருத்தமா இருக்கிறது.
எனக்கு மகள் கிடையாது, எனக்கு பையன் தான். எனக்கு வரப்போற மருமகள் தான் எனக்கு மகள். பெண்களை ரொம்ப மோசமா நடத்தக் கூடாது,’’
என்று அந்த பேட்டியில், ஸ்ரீலேகா கூறியுள்ளார்.
டாபிக்ஸ்