Shanthi Priya: ‘அக்காவை ஏமாத்திட்டாங்க’ பானுப்ரியா தங்கை நிஷாந்தி வருத்தம்!
‘எனக்கே சோஷியல் மீடியாவில் நிறைய மெஜேஜ் வந்தது. அக்காவை இந்த மாதிரி படம் எல்லாம் பண்ண வேணாம்னு சொல்ல சொன்னாங்க’
எங்கஊரு பாட்டுக்காரன் படத்தின் நிஷாந்தியாக அறிமுகமாகி, தற்போது சாந்தி ப்ரியாவாக வாழ்ந்து கொண்டிருப்பவர், நடிகை பானுப்ரியாவின் தங்கை, நிஷாந்தி என்கிற சாந்தி ப்ரியா. தமிழில் பல முன்னணி கதாநாயகர்களிடம் நடித்த பின் இந்தி, தெலுங்கில் சென்ற அவர் சமீபவத்தில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதோ அந்த பேட்டி:
‘‘எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் நான் நடிக்க வரும் போது, என் அம்மா என்னை நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. என் கூட பேச்சை கூட நிறுத்திவிட்டார். ‘ஏன் நான் நடிக்க கூடாது?’ என்று கேட்டால், ‘அக்கா நடித்துக் கொண்டிருக்கிறார், ஒருவர் நடித்தால் போதும், நீ படி’ என்று அம்மா கூறினார்.
‘இந்த ஒரு படத்தை பண்ணிட்டு, நான் படிக்கிறேன்’ என்று கூறினேன். சங்கிலிமுருகன் சார், கங்கை அமரன் சார் எல்லாரும் அம்மாவை சமாதானப்படுத்தி என்னை நடிக்க அழைத்து வந்தனர். அப்போ நிஷாந்தி என்று அறிமுகம் ஆனேன். அதன் பின் சாந்தி ப்ரியா ஆனேன். ஆனாலும் இப்போது வரை செண்பகம் என்று தான் அழைக்கிறார்கள்.
தாராவியில் சமீபத்தில் ஒரு ஷூட்டிற்கு போனேன், ‘நீங்க செம்பகம் தானே’ என்று தான் என்னிடம் கேட்டனர். அப்புறம் , ‘பானுப்பிரியா தங்கச்சி தானே நீங்க..’ என்று தான் கேட்டனர். எங்கே போனாலும் இந்த இரு கேள்வியை தான் முதலில் கேட்கிறார்கள்.
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் பெருமையே எனக்கு இப்போ தான் தெரியும். பாடல்கள் எல்லாம் செம்ம ஹிட். தமிழில் பிரபு சார், விஜயகாந்த் சார், தெலுங்கில் நாகர்ஜூனா சார் படங்களோடு என் திரை பயணத்தை முடித்துக் கொண்டேன்.
இப்போது இருப்பது போல நான் அப்போது இல்லை. 90களில் இவ்வளவு சுதந்திரம் எங்களுக்கு கொடுக்கவில்லை. போனோமா வேலையை முடித்தோமோ, வந்தோமோ என்று தான் இருந்தோம். தேவையில்லாமல் யாருடனாவது பேசினால் எழுதிவிடுவார்கள் என்று பயம் இருந்தது.
அப்போதெல்லாம் யாரும் யாருடனும் பேசமாட்டோம். கதாபாத்திரங்களாக பேசுவதோடு சரி. ஒருவருக்கு ஒருவர் முகத்தை கூட பார்த்துக் கொள்ள மாட்டோம். இப்போது அது எல்லாம் அப்படியே மாறிவிட்டது. என்னையும் அக்காவையும் சமாளிக்கும் நிலையை அம்மாவுக்கு வைக்கமாட்டோம்.
நான் பேசிக்கொண்டே இருப்பேன், அக்கா பேசவே மாட்டார். தொழில் ரீதியாக என் அக்காவை நான் தொடவே முடியாது. நடனத்திலும் அப்படி தான். தொழிலில் ரொம்ப நேர்த்தியாக இருப்பார் அக்கா.
வாய்ப்புகள் வந்ததால் இந்திக்கு போனேன், அதற்காக தமிழில் பண்ணவில்லை என்று இல்லை. எனக்கு வாய்ப்புகள் வரவில்லை என்று வேண்டுமானால் கூறலாம். என் அக்காவால் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று பலர் நினைத்திருக்கலாம். ஆனால், அது இல்லை என எல்லாரிடமும் கூற முடியாது.
ஸ்கூலில் இருந்து வந்ததும் அப்படியே மேக்கப் இல்லாமல் தான் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் நடித்தேன். அந்த ஸ்லாங்க் கூட அப்படி தான் இருந்தது. அக்காவுக்கு முன் நான் திருமணம் செய்ததால், நான் நிறைய அறிவுரையை அக்காவுக்கு வழங்கியிருக்கிறேன்.
அக்கா இப்போ ரொம்ப வருத்தத்தில் இருக்காங்க. இரண்டு மூணு படங்கள் நடித்தாங்க, இயக்குனர்கள் சொன்னது ஒன்னு, கொடுத்தது ஒன்னு என்கிற வருத்தம் அக்காவிற்கு பயங்கரமா இருக்கு. அதனால் தான் அவங்க படங்கள் பண்ணுவதில்லை. பொங்கல் அப்போ கூட அக்காவிடம் கதை சொன்னாங்க, அக்கா முடியாதுன்னு சொல்லிட்டாங்க.
எனக்கே சோஷியல் மீடியாவில் நிறைய மெஜேஜ் வந்தது. அக்காவை இந்த மாதிரி படம் எல்லாம் பண்ண வேணாம்னு சொல்ல சொன்னாங்க. கதை சொல்லும் போது ஒரு மாதிரி சொல்லி, சீன்ல வேறு மாதிரி வச்சு, அக்காவை ஏமாத்திட்டாங்க.
ரஜினி சார், கமல் சார், கார்த்திக் சார் கூட நடிக்க முடியவில்லை என வருத்தம் எனக்கு உண்டு. எனக்கு இப்போதைக்கு விஜய் சேதுபதியை எனக்கும் ரொம்ப பிடித்திருக்கிறது. அவருடன் பணியாற்ற ஆசை . இன்ஸ்டாவில் அவரை பின்பற்றுகிறேன்,’’
என்று அந்த பேட்டியில் சாந்தி ப்ரியா கூறியுள்ளார்.
டாபிக்ஸ்