13 years of VTV: விரும்பாதோர் யாரும் உண்டோ? விண்ணைத்தாண்டி வருவாயா!
Vinnai Thandi Varuvaya: விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாக 13 ஆண்டுகள் ஆகிறது. இப்படம் 2010ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளியானது. இதன் இசை லண்டனிலும், இந்தியாவிலும் வெளியிடப்பட்டது.
ஜெஸ்ஸியை மறந்தவர்கள் தமிழகத்தில் இருக்க முடியுமா என்ன? ஜெஸ்ஸி… ஜெஸ்ஸி… என்று கார்த்திக் உருகியபோது, கார்த்திக் போன்ற ஒரு காதலன் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைத்து பெண்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. வேண்டும், வேண்டாம் என்ற இரு மனநிலையில் உண்மையாகவே காதலித்துவிட்டும், வீட்டிற்காக அந்த ஆசையை கைவிடும்போதும் என மாறி மாறி ஜெஸ்ஸி துன்பப்படும்போது, த்ரிஷா மிக அருமையாக நடித்திருப்பார். அதுதான் ‘ஒரு நாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன்“ என்ற பாடலில் வெளிப்பட்டிருக்கும். ஏ.ஆர். ரகுமானின் இசையில் ஸ்ரேயா கோஷல் கசிந்துருகி பாடும்போது, காதலை வெறுப்பவர்களுக்கே கண்ணீர் வந்துவிடும்.
கார்த்திக் வசிக்கும் மேல் வீட்டிற்கு குடிவருபவர் ஜெஸ்ஸி, மலையாள கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸி. ஜெஸ்ஸியை பார்ததவுடேனே கார்திக் காதலில் விழுந்துவிடுவார். ஆனால் ஜெஸ்ஸிக்கு அவர் மீது பெரிய ஈர்ப்பு இருக்காது. ஆனால், ஜெஸ்ஸியின் பின்னே சுற்றி காதலை வரவழைத்துவிடுவார் கார்த்திக். இன்ஜினியரிங் படித்துவிட்டு, சினிமா இயக்குனர் கனவில் சுற்றிக்கொண்டிருக்கும் கார்த்திக்கை, லேப்டாபுடன் அழகழகான காட்டன் புடவை அல்லது சுடிதார் அணிந்து ஸ்டைலாக ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ஜெஸ்ஸிக்கு பிடித்தபோதும், அவர்கள் குடும்பத்திற்கு பிடிக்கவே பிடிக்கவில்லை. இவர்கள் காதல் தெரிந்தவுடன், ஜெஸ்ஸியை கேரளாவிற்கு அழைத்துச்சென்று அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்துவிடுவார்கள். அங்கும் கார்த்திக் துரத்திச் செல்வார். இடையில் கார்த்திக்கின் சினிமா வேலைகள் துரத்தும். அதனால், அவர் ஜெஸ்ஸியை இழந்துவிடுவார்.
அவரின் லட்சியம் நிறைவேறி அவர் ஜெஸ்ஸி என்ற பெயரிலே ஒரு படம் எடுப்பார். அந்தப்படத்தை பார்ப்பதற்காக ஜெஸ்ஸியை வெளிநாட்டில் இருந்த அழைத்திருப்பார். அந்தப்படம் இவர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக இருக்கும். அதில் கார்த்திக்கும், ஜெஸ்ஸியும் சேர்ந்துவிட்டதுபோல் காட்டியிருப்பார். அதுதான் ஒரு கட்டுக்கோப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜெஸ்ஸி பார்த்த முதல் படம். ஏஆர் ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட். துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கணேசுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்த படம் இது. இந்த படத்திற்கு பின்னர் அவர் விடிவி கணேஷ் என்றே அழைக்கப்பட்டார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான படம். இதில் கார்த்திக்காக சிம்பு, ஜெஸ்ஸியாக த்ரிஷா, முக்கிய கதாபாத்திரத்தில் கணேஷ், ஜனனி ஐயர், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தவையாகும். கௌதம் வாசுதேவ் மேனன் இந்தப்படத்தை மகேஷ் பாபு, சமந்தாவை வைத்து தெலுங்கில்தான் முதலில் இயக்க எண்ணியிருந்தார். ஆனால், மகேஷ் பாபு நடிக்க மறுத்ததையடுத்து இப்படம் முதலில் தமிழில் எடுக்கப்பட்டது. பின்னர் இந்தப்படத்தை தெலுங்கில் நாக சைதன்யா, சமந்தா நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனனே இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், பல ஆண்டுகள் கழித்து, கொரேனா ஊரடங்கில் அனைவரும் வீடுகளில் முடங்கியிருந்த காலத்தில் “கார்த்திக் டயல் செய்த எண்‘ என்ற குறும்படத்தை இப்படத்தின் தொடர்ச்சியாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். அதில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் ஜெஸ்ஸி அவரது கணவருடன் இந்தியா வந்திருப்பதுபோலவும், அப்போது கார்த்திக் போன் செய்து பேசுவதுபோலவும் ஒரு 5 நிமிட குறும்படம் எடுக்கப்பட்டிருக்கும். அதிலும், சிம்பு, த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணிதான். விண்ணைத்தாண்டி வருவாயா வந்து 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அந்தப்படத்திற்கான ரசிகர்கள் கூட்டம் இன்றும் உள்ளது.
டாபிக்ஸ்