TTV Dhinakaran: தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரனின் வேட்புமனு நிறுத்தி வைப்பு..காரணம் என்ன?
Theni constituency: தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன் தாக்கல் செய்த வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை தற்போது நடைபெற்று வருகிறது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. முறையாக கையெழுத்து போடப்படாத, ஆவணங்கள் இணைக்கப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.
இந்த நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தாக்கல் செய்த வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் பிரமாணப் பத்திரம் இணையத்தில் தாமதமாக பதிவேற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சார வாகனத்தில் வந்து டிடிவி தினகரன் வேட்புமனு செய்ததாகவும், மேலும் தினகரனின் வழக்கு விவரங்கள் குறித்து வேட்புமனுவில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனவும் குற்றம்சாட்டி டிடிவியின் மனுவை பரிசீலனை செய்யக்கூடாது என திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக தேனியில் டிடிவி தினகரனின் வேட்புமனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களிலும் வேட்பாளர்கள் கொடுத்துள்ள தகவல்களில் மாற்றுக் கருத்து இருப்பதாக கூறி எதிர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், சில வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
திமுக வேட்பாளர்கள் மனுக்கள் நிறுத்திவைப்பு:
வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வேட்புமனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனு பரீசிலனையின் போது, இரட்டை வாக்காளர் பிரச்னை எழுப்பப்பட்டதால் விளக்கம் கொடுக்கும் வகையில் அந்த வேட்புமனுவை நிறுத்தி வைப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். செல்வகணபதிக்கு 2 தொகுதிகளில் வாக்குரிமை இருப்பதால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட நிலையில், மாற்றுவேட்பாளர் சம்பத்தின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டில் மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. நேற்று மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 1403 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 28) காலை முதல் பெறப்பட்ட வேட்புமனுக்களை அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் 2024:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நேற்றோடு முடிந்துவிட்டது (மார்ச் 27). இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9