TN Lok Sabha election: தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு..39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் விவரம்!
TN Lok Sabha election 2024: தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " தமிழகத்தில் இரவு 7 மணி வரை 72.09% வாக்குபதிவு பதிவாகி உள்ளது. ஒரு சில இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களித்து வருகிறார்கள்.
அதிகப்படியாக கள்ளக்குறிச்சி 75.67%, தருமபுரி 75.44% சிதம்பரத்தில் 74.87% வாக்குகள் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 67.35% வாக்குகள் பதிவாகி உள்ளது. தென் சென்னையில் 67.82%, மதுரையில் 68.98%, வட சென்னையில் 69.26% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு 69% இருந்தது இப்போது 72.09% ஆக உள்ளது. கடைசி வாக்காளர் வரை வாக்கு அளித்த பின்னர் நாளை 12மணிக்கு இறுதி விபரங்கள் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தேர்தல் ஆணையத்திலிருந்து ஒரு தகவல் வந்துள்ளது. தேர்தல் நடைபெறும் அண்டை மாநில எல்லைகளில் தற்பொழுது உள்ள நிலை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம். வாக்கு இயந்திரம் தொடர்பான புகார் பெரிதாக வரவில்லை. ஒரு கட்சியிலிருந்து மட்டும் புகார் அளித்துள்ளார்கள் அது குறித்து உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம் என கூறினார்.