Lok sabha Election Results: திமுக வேட்பாளர் வெற்றி!கோவை தொகுதி முன்னேற்றத்துக்காக உழைப்பை இரட்டிப்பாக்குவேன் - அண்ணாமலை-lok sabha election results annamalai got second place in coimbatore constituency - HT Tamil ,தேர்தல்கள் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Lok Sabha Election Results: திமுக வேட்பாளர் வெற்றி!கோவை தொகுதி முன்னேற்றத்துக்காக உழைப்பை இரட்டிப்பாக்குவேன் - அண்ணாமலை

Lok sabha Election Results: திமுக வேட்பாளர் வெற்றி!கோவை தொகுதி முன்னேற்றத்துக்காக உழைப்பை இரட்டிப்பாக்குவேன் - அண்ணாமலை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 05, 2024 02:06 AM IST

கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் அண்ணாமலை கோவை தொகுதி முன்னேற்றத்துக்காக தனது உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

கோவை தொகுதி முன்னேற்றத்துக்காக உழைப்பை இரட்டிப்பாக்குவேன்
கோவை தொகுதி முன்னேற்றத்துக்காக உழைப்பை இரட்டிப்பாக்குவேன்

தமிழ்நாட்டை பொறுத்தவரை நட்சத்திர தொகுதியாக கோவை இருந்து வந்தது. இங்கு திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராஜ்குமார், பாஜக சார்பில் அண்ணாமலை ஆகியோர் போட்டியிட்டனர். அங்கு மும்முனை போட்டி நிலவிய நிலவியது.

அண்ணாமலை தோல்வி

இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே அண்ணாமலை பின்னடைவை சந்தித்து வந்தார். இதையடுத்து அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிவுற்ற நிலையில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவர் 5,68, 200 வாக்குகளை பெற்றார். இரண்டாவது இடத்தை பிடித்த அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்றார். அதிமுக மூன்றாவது இடத்தை பிடித்த நிலையில், அதன் வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன் 2, 36, 490 வாக்குகள் பெற்றார்.

உழைப்பை இரட்டிப்பாக்குவேன்

தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பகிர்ந்த பதிவில், "கோவை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு, 4.50 லட்ச வாக்குகள் அளித்து, அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்திருக்கும் கோவை பாராளுமன்றத் தொகுதி பொதுமக்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவையின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் திரு. ராஜ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மாற்று கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை தொகுதி வளர்ச்சிக்கு, அவர் மேற்கொள்ளும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவை அளிப்பதோடு, தொடர்ந்து கோவை தொகுதி பொதுமக்கள் முன்னேற்றத்துக்கான என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்று உறுதி அளிக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

வாக்கு எண்ணும் மையத்தை எட்டி பார்க்காத அண்ணாமலை

கோவை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே அண்ணாமலை பின்னடைவை சந்தித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது கோவையில் இருந்தபோதிலும், வாக்கு எண்ணும் மையத்தை அண்ணாமலை ஒருமுறை கூட எட்டிப் பார்க்கவில்லை.

கோவை தொகுதி வெற்றி வேட்பாளரான திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், மூன்றாவது இடத்தை பிடித்த அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் இன்று இருந்தனர். ஆனால், மாலை வரையும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்கு எண்ணும் மையத்துக்கு வரவில்லை. அத்துடன் செய்தியாளர்களுக்கும் பேட்டி அளிக்கவில்லை. கோவை தொகுதிக்கான தேர்தல் முடிவு வந்த பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை மட்டும் பகிர்ந்துள்ளார்.

அண்ணாமலைக்கு இன்று பிறந்தநாளாக இருந்து வந்த நிலையில், அவரது வெற்றியையும், பிறந்தநாளையும் ஒன்றாக கொண்டாடலாம் என்று பாஜக தொண்டர்களும், ஆதரவாளர்களும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அண்ணாமலையின் தோல்வி ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.