Lok Sabha Election Results:'கனிமொழியை எதிர்த்த அனைவருக்கும் டெபாசிட் காலி'.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Lok Sabha Election Results:'கனிமொழியை எதிர்த்த அனைவருக்கும் டெபாசிட் காலி'.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..!

Lok Sabha Election Results:'கனிமொழியை எதிர்த்த அனைவருக்கும் டெபாசிட் காலி'.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..!

Karthikeyan S HT Tamil
Jun 05, 2024 06:15 AM IST

Lok Sabha Election 2024 Results: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி, நடப்பு தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்த வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Lok Sabha Election 2024 Results: "கனிமொழியை எதிர்த்த அனைவருக்கும் டெபாசிட் காலி".. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..!
Lok Sabha Election 2024 Results: "கனிமொழியை எதிர்த்த அனைவருக்கும் டெபாசிட் காலி".. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..!

பாஜக வெற்றி முகம்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 8 மணி நிலவரப்படி 130 தொகுதிகளில் பாஜகவும் 55 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி அபார வெற்றி

தமிழகத்திலும் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை விட 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில அபார வெற்றி பெற்றுள்ளார். கனிமொழி கருணாநிதி எம்பியை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி, தமாக வேட்பாளர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜோன் உள்ளிட்ட 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இதன்மூலம், நடப்பு தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்த வேட்பாளர் என்ற பெருமையை கனிமொழி பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிகாரப்பூர்வ முடிவுகள்

கனிமொழி (திமுக) - 5,40,729

சிவசாமி வேலுமணி (அதிமுக) - 1,47,991

விஜயசீலன் (தமாகா) - 1,22,380

ரொவீனா ரூத் ஜோன் (நாதக) - 1,20,300

2019 நாடாளுமன்றத் தேர்தல்

2019-ல் நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி , அதிமுக-பாஜக கூட்டணியில் அப்போதைய தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் போட்டியிட்டனர். இதன் மூலம் இத்தொகுதி ஸ்டார் அந்தஸ்தை பெற்றது. முதல் முறையாக தேர்தல் களத்தை சந்தித்த கனிமொழி 3,42,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மக்களவைத் தேர்தல் 2024

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் இந்திய தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் 950 வேட்பாளர்கள்

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.