Modi vs Stalin: 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி செய்தது என்ன? - விளாசும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Lok Sabha Election 2024: '10 ஆண்டுகால பாஜக ஆட்சி.. நாட்டையே படுகுழியில் தள்ளிவிட்டது' என்று விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்ச்சித்து பேசினார்.
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோயிலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
வீரத்தின் அடையாளமான விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்த மண்ணில், பாசிசத்தை எதிர்த்தும் - சர்வாதிகாரத்தில் இருந்து விடுபடவும், நாம் நடத்த இருக்கும் இரண்டாவது விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு கட்டியம்கூறும், இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
சாதனைகள் என்றால் எப்படிப்பட்ட சாதனைகள்? தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு திட்டத்தால் நிச்சயமாக நேரடியாகப் பயன்பெறும் மாதிரியான திட்டங்களாக நம்முடைய திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்குச் செல்லும் வரைக்கும், ஒரு தாயைப்போல் பாதுகாக்கும் – தந்தையைப்போல் அரவணைக்கும் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
வரலாறும் - மக்களான நீங்களும் இந்த ஸ்டாலினுக்குக் கொடுத்த வாய்ப்பால், இன்றைக்கு, தமிழ்நாடு முழுவதும் 16 இலட்சம் குழந்தைகள் வயிறார உண்ணும் காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுகிறது.
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும், தமிழுக்கும் துரோகம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், வாக்கு கேட்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார். பிரதமர் ஆவதற்கு முன்னால் தமிழ்நாட்டிற்கு வாக்கு கேட்டு வந்தபோது பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தாரே? அதில் எதையாவது செய்தாரா? இல்லையே.
பத்தாண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசானது, நாட்டையே படுகுழியில் தள்ளிவிட்டது. நாட்டை உடனடியாக மீட்டாக வேண்டும். அப்படி மீட்பதற்கான மிகப்பெரிய வாய்ப்புதான் இந்தத் தேர்தல். அதனால்தான் இந்தியா முழுமைக்குமான ஜனநாயக சக்திகள் இந்தியா கூட்டணியை அமைத்திருக்கிறோம்! இந்தியா கூட்டணியை பார்த்து பயந்து, பிரதமர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார்.
சமீபத்தில், மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் என்று உடனடியாக சிலிண்டர் விலையைக் குறைத்தார். வருடா வருடம்தான் மகளிர் தினம் வருகிறது. அப்போதெல்லாம் இதுபோன்று குறைத்தாரா? இல்லையே. அப்போதெல்லாம் இந்திய நாட்டு மகளிரும் - இந்தியக் குடும்பங்களும் படும் கஷ்டம் அவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? இப்போது தேர்தல் வந்ததும் குறைக்கிறார்… என்னவொரு கருணை உள்ளம் அவருக்கு! தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான உள்ளம்.
மோடி பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு, 2013-க்கு முன்னால், சிலிண்டர் விலை எவ்வளவு? 410 ரூபாய். பத்து ஆண்டுகள் கழித்து, 2023-இல் சிலிண்டர் விலை எவ்வளவு? 1103 ரூபாய். இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது, அதனால் 100 ரூபாய் குறைத்திருக்கிறார். தேர்தலுக்கு தேர்தல் மட்டும் விலை குறைப்பு செய்வது ’பச்சோந்தி அரசியல்’ இல்லையா?.
பத்து ஆண்டில் ஒரு சிறப்புத் திட்டத்தைக்கூட நிறைவேற்றாமல், அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையைக்கூட கட்டத் தொடங்காமல், பேரிடர் நேரத்தில் நிதி தராமல், ஒரு இரங்கல்கூட சொல்லாமல், இப்போது தேர்தல் நேரத்தில் மட்டும் இங்கு அடிக்கடி வாக்கு கேட்டால், உங்களுக்கு ஆதரவு தர நாங்கள் ஏமாளிகளா? நாங்கள் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா? என்று மக்கள் கேட்கிறார்கள்.
இப்படிப்பட்ட பிரமதமர் மோடியை நீங்கள் நம்புகிறீர்களா? மக்கள் யாருமே அவரை நம்பவில்லை. உடனே மக்களை நம்ப வைக்க இப்போது புதிய விளம்பரம் ஒன்று செய்கிறார். என்ன தெரியுமா? “ப்ரீத்திக்கு நான் கேரண்டி” என்று ஒரு விளம்பரம். அந்த மாதிரி இவர், “இது மோடியின் கேரண்டி” என்ற புதிய விளம்பரத்துடன் வந்திருக்கிறார். உண்மையில அவரின் வாக்குறுதிகளுக்கு, கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை.
பிரதமராக நாட்டு மக்களுக்கு நல்லது செய்யச் சொன்னால், பத்தாண்டுகளாகச் சொன்ன எதையுமே செய்யாமல், சேல்ஸ்மேன் மாதிரி கேரண்டி என்று விளம்பரம் செய்த உங்களுக்கு வெட்கமாக இல்லை? அவரின் கேரண்டிகளின் லட்சணம் என்ன?. புதிய வாக்குறுதிகளைக் கொடுத்தால், நிறைவேறாத பழைய வாக்குறுதிகளை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என பிரதமர் மோடி தப்புக்கணக்கு போடுகிறார். தேர்தலுக்குத் தேர்தல் பிரதமர் மோடி வாயால் வடை சுடுகிறார் என மக்களுக்குத் தெரிந்துவிட்டது." எனப் பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்