Akshaya Tritiya 2023 : செல்வம் பெருக.. அஷ்டலட்சுமி உங்கள் இல்லம் தேடி வர.. அட்சயதிருதி அன்று செய்ய வேண்டியவை இது தான்!
அட்சயதிருதியை நாளில் என்னென்ன செய்ய வேண்டும், தங்கம் வாங்குவது ஏன் என்பது குறித்து இதில் காண்போம்
சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. இந்துக்கள் மட்டுமின்றி சமணர்களாலும் கொண்டாடப்படும் ஒரு புனித நாளாக அட்சய திருதி உள்ளது. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். இந்தத் திருதியை நாளன்று, தானங்கள் செய்து புண்ணியத்தைப் பெறுவது மிகவும் சிறப்பு.
அட்சயதிருதி அன்று நாம் செய்ய வேண்டியவை
அட்சய திருதியை அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து வாழையிலை ஒன்றினை வைத்து இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். கலசத்தின் அருகே ஒரு படியில் நெல் நிறைத்து வைக்க வேண்டும்.
பின் அந்த கலசத்தின் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, அதன் அருகில் புதிதாக வாங்கிய பொன், பொருள்களை வைத்து, பூ போட்டு பூஜை செய்ய வேண்டும். அதன் பின் குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும். இப்படி செய்வதால் அஷ்டலட்சுமி உங்கள் இல்லம் தேடி வருவாள் என்பது நம்பிக்கை.
விரதம்
அட்சயதிருதியை அன்று உணவு உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது. எளிய திரவ ஆகாரம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
கோயிலுக்குச் சென்று தரிசனம்
கோயிலுக்குச் செல்வது நல்லது. அதன் பிறகு முழு முதற்கடவுளான பிள்ளையாரை வணங்க வேண்டும். அன்றைய தினம் மாலையில் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் வீட்டிற்கு வந்து மீண்டும் தீப ஆராதனையை கலசத்துக்குச் செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும். கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம்.பெண் பார்ப்பது, நிச்சயதார்த்தம் போன்ற சுபகாரியங்களை இந்தநாளில் செய்வது நல்லது.
அட்சயதிருதியில் தங்கம் வாங்குவது ஏன்?
மூன்றாவது எண்ணுக்குரிய அதிபதி குரு பகவான் உலோகங்களில் தங்கத்தை பிரதிபலிக்கக் கூடியவர். நவகிரகங்களில் மங்களகாரகன் என போற்றப்படும் குருவுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. இதன் காரணமாகவே அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க வேண்டும். இந்த நாளில் தங்கம் வாங்கினால் மங்கலங்கள் அதிகரித்து தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் என சொல்லப்படுகிறது.
தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்றில்லை. அன்றைய தினம் என்ன வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும் என்பது தான் நம்பிக்கை. அன்றைய தினம் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. எனவே உங்களால் முடிந்த உங்களுக்கு தேவையான எதை வேண்டுமானாலும் வாங்கலாம்.
தானம் செய்யலாம்
அட்சய திருதி நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். உணவு, வஸ்திரம் போன்றவற்றை தானமாக வழங்கலாம். இந்நாளில் அன்னதானம் செய்வது மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்