Sani Bagavan: சனிபகவானின் தாக்கத்தைத் தவிர்க்கச் செல்ல வேண்டிய கோயில்கள்
சனிபகவானின் உக்கிரமான தாக்கத்தைத் தவிர்க்கச் செல்ல வேண்டிய கோயில்கள் பற்றி இங்கு காணலாம்.
2023 ஆம் ஆண்டு நிகழப்போகும் சனிப் பெயர்ச்சி சுபகிருது வருடம் உத்தராயணம் ஹேமந்த ருது, தை மாதம் 3ஆம் தேதி, ஜனவரி 17ஆம் தேதி கிருஷ்ண பட்சம் தேய்பிறை தசமி, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரம் 4 ஆம் பாதம் விருச்சிக ராசி, கண்ட நாமயோகம், பல கரணம் கூடிய யோக சுப தினத்தில் கடக லக்னத்தில் விருச்சிக ராசியில், சிம்ம நவாம்சத்தில் கடக நவாம்ச ராசியில் சனி பகவான மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
சனி பகவான் ஒவ்வொரு இடத்துக்கும் மாறும்போது ஒவ்வொரு சனியாக சஞ்சரிக்கின்றார். நான்காம் இடத்தைப் பார்த்தால் அர்த்த அஷ்டமச் சனி என்றும் எட்டாம் இடத்தை அஷ்டம சனி என்று கூறுவர். சனி பகவானின் சச்சரவுகள் குறைய உங்கள் ராசிப்படி எந்தக் கோயிலுக்குச் செல்லலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
ஸ்ரீ பெரும்புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளையும், ஸ்ரீ ராமானுஜரையும் வழிபட்டு வந்தால் சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் அதிகரிக்கும். ஸ்ரீ விநாயகர், குல தெய்வம், ஸ்ரீ பெருமாள் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
ரிஷபம்
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மரா் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால் மிகுந்த நன்மைகளைப் பெறலாம். ஸ்ரீ சிவன், இஷ்ட தெய்வம், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
மிதுனம்
கோவை மாவட்டம் காரமடை அருகே இருக்கும் இருளர்பதி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் சுயம்பு பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் நல்ல பலன்களைப் பெறலாம். ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ மஹாலட்சுமி, ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வந்தால் நல்லது.
கடகம்
திருக்கொள்ளிக்காடு ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும வணங்கி வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆகியோரை தினமும் வழிபட்டு வந்தால் நல்லது.
சிம்மம்
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள பரிக்கல் நரசிம்மர் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம். திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தால் வாழ்க்கை மேன்மையுறும். ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ துர்கை ஆகியோரை தினமும் வழிபடுவது நல்லது.
கன்னி
வேலூர் மாவட்டம் பெரிய மணலியில் இருக்கும் ஸ்ரீ நாகரத்தினசுவாமி திருக்கோயிலுக்குச் சென்று நாகேஸ்வரசுவாமியை வழிபட்டால் நல்ல பலன்களைப் பெறலாம். ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
துலாம்
பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூரில் அமைந்திருக்கும் அருள்மிகு விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரரை வணங்கி வரலாம். திருக்கொள்ளிக்காடு ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
விருச்சிகம்
திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரரையும், அபிராமியையும் வணங்கி வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஸ்ரீ பார்வதி ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
தனுசு
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருக்கும் குச்சனூரில் சுயம்புவாக அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வந்தால் நல்லது.
மகரம்
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் இருக்கும் வாலீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். ஸ்ரீ நவக்கிரகம், ஸ்ரீ ஐயப்பன் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
கும்பம்
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் இருக்கும் ஸ்ரீ பூமாதேவி சமேத ஆதிவராகப் பெருமாளை வழிபட்டால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். ஸ்ரீ சிவன், ஸ்ரீ பார்வதி ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
மீனம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்று மங்கலத்தில் இருக்கும் லட்சுமி நாராயணனை வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.