Triyambakeshwarar temple: குடும்ப அமைதிக்கு திரியம்பகேஸ்வரர் கோயிலுக்கு செல்க!
குடும்பத்தில் அமைதி நிலவ திரியம்பகேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்!
இந்தியத் திருநாட்டில் உலகப் புகழ்பெற்ற பல கோயில்கள் உள்ளன. வடமாநிலங்களில் உள்ள கோயில்களின் அமைப்பு வேறு மாதிரியாகவும், தென்மாநிலங்களில் உள்ள கோயில்கள் திராவிடக் கட்டடக்கலையைச் சார்ந்த வகையிலும் அமைந்துள்ளன.
ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனியம்சம் இருப்பது அதிசயங்களில் ஒன்றுதான். அப்படியொரு அதிசயம் மகாராஷ்டிராவில் உள்ள திரியம்பகேஸ்வரர் கோயில் ஆகும். நாசிக்கிலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இந்தக் கோயிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
கோதாவரி ஆறு தொடங்கும் பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக்கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. கண்ணைக் கவரும் அழகிய சிற்பங்கள் நிறைந்துள்ளன.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலையின் மீதுள்ள இந்தக் கோயிலைச் சுற்றிலும் இயற்கைச்சூழலும் நெஞ்சத்தை நிறைக்கும் அமைதியும் திகழுவதால் பல முனிவர்களும், சித்தர் பெருமான்களும் வாழ்ந்த தபோவனமாகக் காட்சியளிக்கிறது.
பல்லாயிரம் வருடங்களாக இந்தக்கோயில் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தில் எப்பொழுதும் நீர் வழிந்து கொண்டே இருப்பது பிரமிக்க வைக்கும் நிகழ்வாகும்.
பிற ஜோதிர்லிங்க தலங்கள் யாவும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டுள்ளன. ஆனால், திரியம்பகேஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய முக்கடவுளரின் முகங்கள் போன்ற அமைப்பு அமைந்திருப்பது தனிப்பெருமையாகும்.
முன்னொரு காலத்தில் இங்கு வசித்த கௌதம முனிவர் தன் மனைவியோடு இருந்த கடுமையான தவத்தின் பயனாக இங்கு சிவன் தன் ஜடாமுடியில் இருந்த கங்கையின் சில துளிகள் விழுந்ததாகவும், அதுவே இங்கு வற்றாத நீரூற்றாக பெருகுவதாக நம்பப்படுகிறது.
கௌதம முனிவரின் விருப்பத்துக்கிணங்க பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் சுயம்பு வடிவில் இங்கு வீற்றுள்ளனர்.
திரியம்பகேஸ்வரர் எழுந்தருளியுள்ள கர்ப்பக்கிரகம் தாழ்வாக உள்ளதால் பக்தர்கள் அங்குள்ள மண்டபத்திலிருந்துதான் மூலவரை தரிசிக்க வேண்டும். மும்மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கப் பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே உள்ளது. ஆவுடையார் உரல் போன்று நடுவே பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளம் உள்ளது.
உலகம் தோன்றிய காலத்திலிருந்து பக்தர்களுக்கு அருள்புரியும் அருமை பெருமை மிக்க திரியம்பகம் திருத்தலத்தை சென்று தரிசனம் செய்து வழிபடுகின்றவர்களுக்கு அவர்கள் செய்யும் தொழில் சிறப்புடன் விளங்குகின்றது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு, சிம்ம ராசியில் வரும் போது கும்பமேளா பெருவிழா இங்கே கொண்டாடப்படுகின்றது.
திரியம்பகேஸ்வரரை இங்கு தரிசித்தால் பக்தர்களின் நிச்சயம் அமைதி விளையும். வாழ்க வளமுடன்!