Karaikkal Ammaiyar: ஈசனே அம்மை என்றழைத்த காரைக்கால் அம்மையாரின் கதை!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Karaikkal Ammaiyar: ஈசனே அம்மை என்றழைத்த காரைக்கால் அம்மையாரின் கதை!

Karaikkal Ammaiyar: ஈசனே அம்மை என்றழைத்த காரைக்கால் அம்மையாரின் கதை!

Manigandan K T HT Tamil
Jul 03, 2023 04:45 AM IST

Karaikkal: ஒருநாள், பிரம்மதத்தன், இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு அனுப்பி வைக்கச் சொல்ல, அதே நேரத்தில் வெளியூரிலிருந்து சிவன் அடியார் ஒருவர் உணவு அருந்த வீட்டிற்கு வந்தார்.

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்

இவருடைய மகள் தான் புனிதவதி. பேரழகுப் பெட்டகம். சிறு வயதில் இருந்தே சிவபெருமானின் திருவடிகளை வணங்கியும், பக்தி செலுத்தியும்,சிவன் அடியார்களுக்கு அன்பான உபசரிப்பை நல்கி, அவர்தம் நலன்களை ப் போற்றும் இயல்பு உடையவர்.

திருமண வயதுக்கு வந்தபோது, மரபிற்கேற்றபடி நாகப்பட்டினத்திலுள்ள வணிகர் தலைவர் நிதிபதி என்பவரின் மகன் பரமத்தனுக்கு, நிச்சயமாகி, சுற்றமும் நட்பும் சூழ நன்கு திருமணம் நடந்தேறியது.

ஒரே மகள் ஆகையால் அருகிலேயே அவர்களுக்கு வீடு பார்த்து வைத்து, நல்ல தொழிலும் வைத்துக் கொடுத்தார். குடும்பம் நல்ல படியாக நடந்தது. புனிதவதி வழக்கம் போல சிவநேசம் பெருக, சிவனடியார்களுக்கு உணவளிப்பது, புத்தாடைகள் தருவது என்ற வழக்கம் தொடர்ந்தது.

ஒருநாள், பிரம்மதத்தன், இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு அனுப்பி வைக்கச் சொல்ல, அதே நேரத்தில் வெளியூரிலிருந்து சிவன் அடியார் ஒருவர் உணவு அருந்த வீட்டிற்கு வந்தார்.

புனிதவதி, அடியார்க்கு அன்னம் இட்டபின் கூடவே ஒரு மாங்கனியை நறுக்கி அவருக்குத் தர, அவரும் மன மகிழ்ந்து உண்டு, ஆசிகூறிச் சென்றார். மதியம் உணவருந்த வீடு வந்து, மாம்பழம் சாப்பிட்ட பிரம்மதத்தன், மற்றொன்றை கேட்க, புனிதவதி தடுமாறிக் கணவர் என்ன கூறுவாரோ என்று குழப்பமடைந்து, பயந்து, சிவபெருமானை வேண்டி, ஒரு மாம்பழம் உடனே கிடைக்க, அதை பழத் துண்டுகளாக்கி கணவரிடம் கொடுத்து உண்மையைச் சொன்னார்.

பின்பு, அதன்சுவை கண்டு, ஈரேழு உலகத்திலும் கிடைக்காது என்று கூறி அது கிடைத்த விபரம் கேட்க அது சிவனார் தந்தது எனக் கூறியதை அவனால் ஏற்கவே முடியவில்லை.

சோதிப்பதற்காக இன்னும் ஒரு பழம் கேட்கச் சொல்லப் புனிதவதி கேட்க, மீண்டும் ஒரு பழம் கைக்கு வந்தது. இதைக் கண்ட தத்தன் ஒரு கணம் செயலற்று நின்று, தம் மனதுக்குள் இவள் ஒரு தெய்வம், மனைவியாகக் குடும்பம் நடத்த முடியாது என தீர்மானித்துத் தாம் வெளியூர் சென்று வணிகம் செய்யப்போவதாய்க்கூறிச் சென்று விட்டான்.

"இருந்தோம்பி இல்வாழ்வ

தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற்

பொருட்டு" பொருளைச்

சேர்த்து இல்வாழ்வில்

இருப்பதே விருந்தினரைப்

போற்றி உபசரிப்பதற்கே

என்ற வள்ளுவர் சொன்ன

விருந்தோம்பலைக் கடை பிடித்தொழுகிதால், வேறு நினைப்புகள் வரவில்லை.

வணிகத்திற்காக வெளியூர் சென்ற பிரம்மதத்தன், பின்பு பாண்டிய நாடு சென்றபின் அங்கேயே ஒரு பெண்ணை மணமுடித்து, ஒரு குழந்தை பிறந்து, அதற்கு புனிதவதி என்றே பெயர் வைத்தான். ஒருநாள் தனது மனைவி , குழந்தை சகிதம், புனிதவதி இல்லம் வந்து, அவர் பாதங்களில் அனைவரும் விழுந்து அவரின் அருளால் தான் வாழ்வதாக்கூறி அழுது கும்பிட்டார்.

தட்டிக் கேட்ட சுற்றத்தாருக்கு இவர் ஒரு சாதாரண மானிடப் பிறவி அல்ல, தெய்வம் என கூற, சுற்றத்தார் மரியாதை கலந்த பயத்துடன் செய்வதறியாது திகைத்து வெளியேறினர்.

மனம் வேதனையில் துடிக்க வாழ்வை வெறுத்து, தனது அழகு நீங்கி எலும்புக் கூடு போன்ற பேய் வடிவம் தந்து அருள் என சிவபெருமானை வேண்டி, அதன்படி உருவம் அமைந்தது.

பின்னர் பல தலங்களுக்கும் சென்று இறுதியில் கயிலையில் சிவ தரிசனம் செய்ய உத்தேசித்து புறப்பட்டுப் போய் கைலாயத்தில் காலால் நடக்காது தனது தலையால் நடந்து போக, இதைக் கண்ட பார்வதி தேவி புரியாமல் வினவ, சிவன் புன்னகைத்து "இவள் நம்மைப் போற்றும் அம்மை" என்றார்.

ஈசனே அம்மை என்றழைத்ததால் இவரைக் காரைக்கால் அம்மையார் என்று அழைத்தனர்.

இறைவனின் திருவடிகளில் அப்பா எனக் கூறி ஆனந்தக் கண்ணீர் விட்டு அமர்ந்தவர் தாம் எப்போதும் ஈசனின் திருவடிகளைப் பற்றியே இருக்க வேண்டும் என வேண்டி விண்ணப்பித்தார்.

இவர் பிரபஞ்ச வெளியின் துடிப்புகளை அதன் சாரங்களைக் கிரகிப்பவராக இருந்தார். பலருக்கும் இவ்வுணர்வு இருந்தாலும், இவரைப் போன்ற சிலரே அதை முழுதுமாய் உணர்ந்து அதற்கேற்றபடி செயல்பட்டுச் சிறப்பான ஓர் இடத்தைப் பிடிக்கன்றனர்.

உமையொருபாகனைத் துதித்து வேண்டிச் சிவபூத கணங்களில் நானும் ஒன்றானேன் என் மகிழ்ந்து தமக்குள் உண்டாகிய ஞானத்தினால், மனமுருகி, அற்புத திருவந்தாதியையும் இரட்டை மணி மாலையைப் பாடி அருளினார். இவை இரண்டுமே பதினோராம் திருமுறையைச் சேர்ந்தது என்பது சிறப்பு. அந்தாதி என்கின்ற இலக்கண முறை அறிமுகம் செய்யப்பட்டது இவரால்தான்.

இவர் நினைவாக மாங்கனி திருவிழா காரைக்காலில் வருடா வருடம் நடக்கிறது. இந்த மாதம் 2ம் தேதி இங்கு மாங்கனி இறைத்தல் விழா நடைபெற்றது. குழந்தை பாக்யம் இல்லாதவர்கள் இப்பழங்களைச் சாப்பிட நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. 

63 நாயகன் மார்களில் இவர் மட்டுமே. அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். தாய்மைக்குத் தந்த சிறப்பாக இதைக் கருதுவர். இவருக்கு காரைக்காலில் தனிக் கோயில் உண்டு. சுந்தராம்பாள் உடனுறைக் கயிலாசநாதர் கோவிலில் இருந்து அம்மையார் கோவிலுக்கு வரும் இறைவன் மீது அன்பின் வழிபாடாக, மாங்கனிகளை வீசி வழிபடுவார்கள்.

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையாறு, சென்னை.

Whats_app_banner

டாபிக்ஸ்