Palani Thaipusam: கொடியேற்றத்துடன் தொடங்கியது பழனி தைப்பூசத் திருவிழா!
பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவின் போது ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருவார்கள்.இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் பழனிக்கு முருகப்பெருமானைத் தரிசனம் செய்ய வருவார்கள்.
இந்நிலையில் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஜன 29) தொடங்கியது. பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9.30 மணியளவில் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6ம்நாள் திருவிழாவான பிப்ரவரி 3ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு நான்கு ரதவீதிகளில் வெள்ளித்தேரோட்டமும், பிப்ரவரி 4ஆம் தேதி முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது.
இன்று முதல் தினமும் அருள்மிகு முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணைஆணையர் நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி இரவு தெப்பத்தேரும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைய உள்ளது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக பழனி திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்