Sarangapani Temple: தமிழ்நாட்டின் 3ஆவது பெரிய தேர் - ஸ்தம்பித்த கும்பகோணம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sarangapani Temple: தமிழ்நாட்டின் 3ஆவது பெரிய தேர் - ஸ்தம்பித்த கும்பகோணம்

Sarangapani Temple: தமிழ்நாட்டின் 3ஆவது பெரிய தேர் - ஸ்தம்பித்த கும்பகோணம்

Suriyakumar Jayabalan HT Tamil
May 04, 2023 02:46 PM IST

தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய தேரான ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோயிலின் தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

சாரங்கபாணி திருக்கோயிலின் தேரோட்டம்
சாரங்கபாணி திருக்கோயிலின் தேரோட்டம்

இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இங்குக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று கருட சேவை வைபவம் நடைபெற்றது.

கொடியேற்றம் தொடங்கியதில் இருந்து தினமும் சாரங்கபாணி ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. முன்னதாக சாரங்கபாணி ஸ்ரீதேவி மற்றும் மூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். சிறப்பு அலங்காரத்தில் இருந்த தேரை கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் மற்றும் முக்கிய அலுவலர்கள் ஆகியோர் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர்.

இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களுக்குக் கலந்து கொண்டு கோஷம் முழங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளின் வழியாக வந்து நிலையடிக்குச் சென்றது. பாதுகாப்புப் பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சாரங்கபாணி கோயில் தேர் தமிழ்நாட்டிலேயே மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்புக்குரியதாகும். இந்த தேர் 110 அடி உயரமும் 30 அடி விட்டமும் 400 டன் எடையும் கொண்டதாகும். இந்த தேரில் ஒன்பது அடி உயரம் கொண்ட நான்கு சக்கரங்கள் உள்ளன. தேரின் முன் பகுதியில் 22 அடி நீளம், 5 அடி அகலம், 10 அடி உயரம் கொண்ட இரண்டு குதிரைகள் உள்ளன.

இந்த தேரோட்டத்தின் காரணமாகக் கும்பகோணம் மாநகராட்சி முழுவதும் திருவிழாக் கோலமாகக் காணப்படுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்