Vanmeekanathar Temple: ஆன்மீகப் பயணம் - புற்றுநோய் சாபம் பெற்ற மகாவிஷ்ணு!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vanmeekanathar Temple: ஆன்மீகப் பயணம் - புற்றுநோய் சாபம் பெற்ற மகாவிஷ்ணு!

Vanmeekanathar Temple: ஆன்மீகப் பயணம் - புற்றுநோய் சாபம் பெற்ற மகாவிஷ்ணு!

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 18, 2022 10:27 PM IST

திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில் குறித்து இந்த ஆன்மீகப்பயணத்தில் காணலாம்.

<p>வன்மீகநாதர் கோயில்</p>
<p>வன்மீகநாதர் கோயில்</p>

வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். மகாபலி அந்த தானத்தைக் கொடுக்க தன் முதல் ஓரடியால் மண் உலகத்தையும், நேரடியாக விண்ணுலகத்தையும் அளந்த மகாவிஷ்ணு தனது மூன்றாவது அடியை மகாபலி தலையில் வைத்து அவனைப் பாதாள லோகத்திற்கு அனுப்பினார்.

தல வரலாறு

நீதிநெறி தவறாமல் தர்மத்தின் படி ஆட்சி செய்து வந்த மகாபலியைப் பாதாளத்திற்கு அனுப்பிய மகாவிஷ்ணுவைத் தொடர்ந்து வந்த தர்ம தேவதை அவரின் பாதத்தில் புற்றுநோய் ஏற்படச் சாபம் தந்தாள். தர்ம தேவதையால் சாபம் இடம்பெற்ற மகாவிஷ்ணு தனது சாபம் தீர பூவுலகில் சிவாலய தரிசனம் செய்து திருவாடானை ஆதித்த ரத்னேஸ்வரரை வணங்கி பின் ஜெயபுரம் என்கின்ற வெற்றியூர் தலத்தை அடைந்தார்.

அங்கு வாசுகி தீர்த்தத்தில் நீராடி இறைவன் பழம் புற்றுநாதரை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தார். பாதத்தில் ஏற்பட்டிருந்த புற்றுநோயும் தீர்ந்தது. வடமொழியில் வன்மீகம் என்பதற்குத் தமிழில் புற்று என்று பொருள். மகாவிஷ்ணுவின் பழம் புற்றுநோயை நீக்கி அருளியதால் இறைவனும் பழம்புற்றுநாதர் என்று அழைக்கப்பட்டார்.

தல சிறப்புகள்

கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. ஆலயத்திற்கு முன்னால் வாசுகி தீர்த்தம் உள்ளது. படித்துறை கடந்து சென்றால் பெரிய பரந்த மண்டபம் காணப்படுகிறது. மண்டபம் நுழைந்து பலிபீடம், கொடிமரம், நந்தி கடந்து சென்றால் அர்த்தமண்டபம் மண்டபத்துடன் கூடிய கருவறையில் மூலவர் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

இறைவன் சன்னதிக்கு முன்னால் வலது புறம் தெற்கு நோக்கி அம்பாள் பாகம் பிரியாள் சன்னதி அமைந்திருக்கிறது. சுற்றுப்பிரகாரத்தில் தலவிருட்சம் வில்வ மரமும், மரத்தடியில் விநாயகர், நாகர், கன்னி மூலையில் விநாயகர், அதை எடுத்து வள்ளி தெய்வானையுடன் முருகர், சண்டிகேசுவரர், பைரவர், நவக்கிரக சன்னதிகள் ஆகியவற்றைக் காணலாம்.

இத்தல விநாயகர் நினைத்தது முடிக்கும் விநாயகர் என்ற பெயருடன் விளங்குகிறார். இவரிடம் பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்களின் நம்பிக்கை வீண் போகாமல் நினைத்தது நடந்து இன்பம் கொடுப்பதால் இத்திருநாமம் ஏற்பட்டிருக்கிறது.

இத்தலத்தில் உள்ள கோஷ்ட தக்ஷிணாமூர்த்தி வித்தியாசமானவர். கல்லால் ஆன மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்வதைப் போன்று அமையாமல், தானே தவநிலையில் தனக்குத் தானே உபதேசம் செய்வது போன்று தக்ஷிணாமூர்த்தி திருவுருவின் கீழ் பிரகதீஸ்வரர் என்ற சிவபெருமானை உபதேசம் கேட்பதாக அமைந்துள்ளது ஓர் அரிய காட்சியாகும்.

தல நடைதிறப்பு மற்றும் வழி

கோயிலில் நடை காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இக்கோயில் திருவாடானை - தொண்டி நெடுஞ்சாலையில் 5 கிமீ தொலைவில் உள்ளது. காடாகுடி விலக்கிலிருந்து வலதுபுறம் செல்லும் சாலையில் 6 கிமீ தொலைவில் இந்த தலத்தை அடையலாம்.

Whats_app_banner