Ervadi Dargah: ஏர்வாடி தர்ஹாவில் 849-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
Sandalwood Festival: புகழ்பெற்ற ஏர்வாடி தர்காவில் 849-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கோலாகமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள புகழ்பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷாகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹிம் ஷாகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் ஆண்டுதோறும் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் சந்தனக் கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு முஸ்லிம் மதத்தினர் மட்டுமல்லாது அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக தென் மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து அதிக அளவிலான மக்கள் ஏர்வாடி தர்ஹாவுக்கு வேண்டுதல் செய்வர். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தங்கியிருந்து பிரார்த்தனை செய்து வந்தால் அவர்கள் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹிம் தர்ஹாவின் 849-ம் ஆண்டு உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா கடந்த மே 31 ஆம் தேதி புகழ்மாலை ஓதப்பட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான உரூஸ் என்னும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று மாலை (ஜூன் 12) தொடங்கி, இன்று காலை 6 மணி வரை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி நல்ல இப்ராஹிம் மஹாலிலிருந்து தாரை, தப்பட்டை முழங்க வாணவேடிக்கையுடன் சந்தனக் குடங்களை தர்ஹா நிர்வாகத்தினர் எடுத்து வந்தனர்.
முன்னதாக 35 அடி உயர அலங்கரிங்கப்பட்ட சந்தனக்கூட்டில் இக்குடங்கள் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுஷா நாயகத்தின் அடக்க தலத்தில் சந்தனம் பூசப்பட்டு வண்ணப்போர்வை போர்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து வந்திருந்த அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் மக்கள் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார்.
சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இன்று (ஜூன் 13) ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய வருகிற ஜூன் 24 ஆம் தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்