Durga Devi: துர்காமன் எனும் கொடிய அசுரனை அழித்த துர்கா தேவியின் சிறப்புகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Durga Devi: துர்காமன் எனும் கொடிய அசுரனை அழித்த துர்கா தேவியின் சிறப்புகள்

Durga Devi: துர்காமன் எனும் கொடிய அசுரனை அழித்த துர்கா தேவியின் சிறப்புகள்

Manigandan K T HT Tamil
Nov 03, 2023 06:50 AM IST

பஞ்ச பூதங்களில் ஒன்று என உள்ள, மண் கொண்டு, செய்த பொம்மைகளால் என்னை பூஜிப்போருக்கு, சகல நலன்களையும் தந்து ரக்ஷிப்பேன் என தேவி புராணத்தில் அம்பாள் சொல்லியதை, செய்து, அதில் பெரியதொரு வெற்றியைப் பெற்றவன், 'சுரதா' என்கிற மன்னன்.

துர்கா தேவி  (Photo by Sanchit Khanna/ Hindustan Times)
துர்கா தேவி (Photo by Sanchit Khanna/ Hindustan Times) (Hindustan Times)

பகவதி எனும் நாமம் பொதுவாக துர்கா தேவியை குறிக்குமென்பர்.

அம்மனை வழிபட பல விழாக்கள் இருந்தாலும், நவராத்திரி, அதனின்று வேறுபட்டும், முக்கியத்துவம் பெற்றும் திகழ்கிறது. நவராத்திரியில், முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியை, மஹேஸ்வரி, கவுமாரி, வராஹியாக பாவித்து பூஜை செய்கிறோம். துர்கை நெருப்பின் அழகு, ஆவேசப் பார்வை, வீரத்தின் விளை நிலம், சிவப்பிரியை, இச்சா சக்தி. அனைத்து போர் வீரர்கள், தொடக்கத்திலும், முடிவிலும் இவளை வழிபட்டே வந்திருக்கிறார்கள்.

நவ துர்கை, வன துர்கை, சூலினி துர்கை, ஜாதவேத துர்கை, ஜூவாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, அகரி துர்கை, லவண துர்கை என்கிற அனைத்தும் ஸ்ரீ துர்காதேவி அம்பாளின் புகழ்பெற்ற அம்சங்கள். துயரங்களைப் போக்கியருளும் பேரருள் பெரும் ஒளி அவள்.

நவராத்திரி கொலுவின் அடிப்படை அம்சமே, ஆன்மிகச் சிந்தனை வளர்ந்து, அனு தினமும் அபவாதம், மற்றும் பல அறமற்ற செயல்களைச் செய்யாது ஒழுகி, இறுதி காலங்களில் இறைவனை அடைவது என்பதை விளக்குவதே. ஆகவேதான் கொலு படிகளின் அமைப்பில், இன்னின்ன படியில் இது போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும் என வரையரை செய்திருக்கிறார்கள்‌.

பஞ்ச பூதங்களில் ஒன்று என உள்ள, மண் கொண்டு, செய்த பொம்மைகளால் என்னை பூஜிப்போருக்கு, சகல நலன்களையும் தந்து ரக்ஷிப்பேன் என தேவி புராணத்தில் அம்பாள் சொல்லியதை, செய்து, அதில் பெரியதொரு வெற்றியைப் பெற்றவன், 'சுரதா' என்கிற மன்னன் தனது எதிரிகளை போரில் அழித்துப் புதுயுகத்தையே படைத்ததாக புராணம் சொல்கிறது என்பர்.

ராகு காலத்தில் பூஜிக்கப்பட்டு,அருள்மழை பொழிய, தேவி, “மக்கள் சண்டி”, "ராகுகால துர்கா" என்று அனைவராலும் போற்றி வணங்கப்படுகிறார். " த்" என்றால், அசுரர்களை அழித்தொழிப்பவள், "உ" என்றால் தடைகளைத் தகர்த்து எறிபவள், “ர்” என்றால் யோகங்களை விரட்டி அடிப்பவர், "க்" என்றால், பாவங்களை வலுவிழக்கச் செய்து காப்பவள்,"ஆ"என்றால் பயத்தை அழித்துக் துணிவைத் தருபவள் என பொருள் கூறுவர்.

(துர்க்கா-த்+உ+ர்+க்+ஆ)

மந்திர சாஸ்த்திரம் இவரை ஒன்பது பெயர்களில் அழைத்து பூஜிக்கிறது. குமரி, திரிமூர்த்தி, கல்யாணி,  ரோஹிணி, காளிஹா, சண்டிகை, சாம்பவி, துர்கா, சுபத்ரா என்பதே அது. தேவி பூஜைக்கு , எலுமிச்சை பழ விளக்கேற்றி, வழிபடுவது மரபு. வலிமையான ஒரு அசுரனை வதம் செய்த, சக்தியின் அம்சமான துர்கை, நமது பாவங்களை, துன்பம், சோதனை, பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பாள் என நம்பி, வாழ்வில் ஒளியேற்ற சிரத்தையுடன் பூஜை செய்து வழிபடுவர்‌.

14ஆம் நூற்றாண்டில் சில கையெழுத்து பிரதிகள் துர்கா பூஜையின் வழிகாட்டுதல்களை வழங்கியிருப்பதாக அறிகிறோம்‌. பிரிட்டிஷ் ஆட்சியின் போதே, துர்கா பூஜை முக்கியத்துவம் அதிகரித்து இருந்ததாக, அது, சமூக ,கலாச்சார விழாவாக நடந்ததாக, அறிகிறோம். ரிக்வேத பாடல்கள், வேத இலக்கியங்கள், அதர்வண வேதம், தைத்திரிய ஆரண்யம் இவைகள், ஸ்ரீ துர்கா பூஜை பற்றி கூறுகின்றன. களிமண் சிற்பங்களை எடுத்துச் சென்று, நதி அல்லது நீர் நிலைகளில், மூழ்கடித்து, தேவியை, தெய்வீக பிரபஞ்சத்திற்கு அவரது திருமண வீட்டிற்கு திரும்புவதை குறிப்பதாக ஐதீகத்தைக் குறிப்பிடுவர். 

"யுனஸ்கோவின்" கலாச்சார பாரம்பர்ய பட்டியலில் கொல்கத்தா துர்கா பூஜை சிறப்பாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரியின் நான்காம் நாள் அர்ப்பணிக்கப்பட்டு, சிம்ம வாஹனத்தில் கம்பீரமாக அமர்ந்து அருளாட்சி புரியும் ஸ்ரீ துர்கா தேவி பற்றி தேவிமஹாத்மியம் குறிப்பிடுகையில், இவரே, ஒன்றுமே இல்லாத பிரபஞ்சத்தில், தமது தெய்வீகப் புன்னகையால், பெரும் ஆற்றலைப் பரப்பி சிருஷ்டி செய்தவர் என்கிறது. இவரிடமிருந்தே, சூரியன், உட்பட அனைத்து கிரஹங்களும் சக்தியைப் பெற்று நமக்கு தருகின்றன.

இவரே, பேரண்டத்திற்கு, பல செயல்களை ஆற்றும் மஹாலக்ஷ்மி, மகேஷ்வரி, மஹாகாளியை உருவாக்கி ஆதிபராசக்தியின் அகண்ட சொரூபமாய் எட்டு சித்திகளும், ஒன்பது நிதிகளும், கைவரப்பெற்ற, அஷ்ட புஜ தாரணியாய், 8 கைகளுடன் காட்சி தந்து, அதில் ஒரு கை, அபய முத்திரையைக் காட்டிக் கொண்டு, அருளாட்சி செய்து வருகிறாள்.

அனைத்து துயரங்களையும் தீர்க்கும் இவரை, சமஸ்கிருதத்தில் "துர்கா" என்றால் தகர்க்க முடியாத கோட்டை எனப் பொருள் கூறுவர். மஹா பாரதத்தில் யுதிஷ்டரர், அர்ஜூனன் ஆகியோரது துர்கைத் துதி உள்ளது. ஹரிவம்ஸ விஷ்ணுதுதி வடிவிலும்,பிரத்யும்னனின் பிரார்த்தனைய லும் இவர் துதி உள்ளது. ஒரு சமயம் ஸ்ரீ ராமர்,இவரது பூஜைக்கு 108 தாமரை மலர்களைச் சேகரித்து வைக்க,தேவி, விளையாட்டாய் ஒரு பூவை மறைத்து வைக்க, அதிர்ச்சி அடைந்த ராமர், தமது ஒரு விழியை ஈடாகப் கொடுக்க வர, தேவி அதைத் தடுத்து விபரம் சொல்லி, ஆசி கூறி மகிழ்ந்ததாகக் கதை ஒன்று உள்ளது.

இந்நாள், சில இடங்களில் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. "நவபத்ரிகா"எனப்படும் 9 வகையான தாவரங்களை படைத்து தேவியை வழிபடுவர். சாக்த இந்து சமூக மக்கள், மகிஷாசுர வதம் செய்ததை, வெற்றியை, அடையாள, உண்மையான தியாகத்தை போற்றி வழிபட்டு பூஜிக்கின்றனர்.

இவரைப் போற்றி வழிபட ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம், துர்கா காயத்ரி ஸ்லோகம், ஸ்ரீ துர்கா ஸப்தஸ்லோகி, ஸ்ரீ மங்கள சண்டிகா தோத்ரம், ஸ்ரீ துர்கா பஞ்ச ரத்னா தோத்ரம், ஸ்ரீ துர்கா கவசம், ஸ்ரீ துர்கா சந்த்ரகலா ஸ்துதி, ஸ்ரீ துர்கா நிவாரண அஷ்டகம், ஸ்ரீ ராகுகால துர்கா அஷ்டகம், ஸ்ரீ துர்கா ரோக நிவாரண அஷ்டகம். என பல உண்டு. இவைகள் பலராலும் பல இடங்களில் பாடப்படுகிறது.

சிம்ஹ வாகனத்திலமர்ந்து, கொடியிலசையும் மயில் தோகையுடன், சிகப்பு நிறம் கொண்ட புடவை சகிதம், சர்வ அலங்காரத்தில், கையில் சூலத்துடன், அருள் ரூபிணியாக காட்சிதரும், துர்கா தேவியை,செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் வழிபடுபவர். மஹாத்தான சுஹாசினி பூஜைகளிலும் , சைலபுத்ரீ, ப்ரம்ஹசாரினி, சந்ரகாந்தா, குஷ்மண்டா, மகாகவ்ரி, கார்த்தியாயினி காளாத்ரி, சித்திதார்த்தி என்று பல துர்கைகளும் சிறப்பாக இடம் பெறும்.‌

எதையும் எதிர்கொள்ளும் துணிவைத் தருகின்ற துர்காதேவிக்கு, அஷ்டமி தினத்தில், அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி, பூக்களைக் கொண்டு, அர்ச்சனை செய்தும், சிகப்பு புடவை, வஸ்த்திரங்களை அணிவித்தும், நம்பிக்கை கொண்டு, தம் வேண்டுதல் நிறைவேற பிரார்த்திப்பர். வேண்டுதல் செய்தவரின், மனத்தளர்ச்சி, பயம், குழப்பங்களகன்று புத்தொளி பிறப்பதாக கூறுவர்.

பெண்கள், ஆண்களின் திருமணம், பிற துன்பங்கள் ஏற்பட, அவர் ஜாதகத்தில் உள்ள ராகு, செவ்வாய் காரணம் என்பர். இதுவிலக துர்காதேவி வழிபாடு மிகச் சிறந்ததாக முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். கல்வி, உடற்கேளாறுகள், மாங்கல்ய பலம், சந்ததி வளர்ச்சி,செழிப்பு போன்றவற்றிற்கு பல்வேறு நிலை பூஜைகளைச் செய்வர்.

துர்கா பூஜையை, வட மாநிலங்களில், "துர்க் கோஸ்த்தவா"என்றும் "ஷரோதோத்ஸவ்" எனவும் அழைப்பர்.மஹிஷாசுரனை சம்ஹாரம் செய்ததைக் தீமைக்கு எதிரான நன்மை நிலையை எடுத்துக்காட்டி நிற்பதாக கொண்டு வழிபடுவர். 

மேற்குவங்கம், அஸ்ஸாம், பிஹார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் தவிர இலங்கை,நேபாளம், பங்களாதேஷ் போன்ற பல இடங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. செவ்வாய் ராகு காலத்தில் தேவி முன் அமர்ந்து மிக சிரத்தையுடன் "ஓம் தும் துர்கையை நமஹ" எனும் ஒருவரி மந்திரத்தை 108 தடவைகள் உச்சரித்து உரிய பலன் பெறலாம் என்பதே ஐதீகம்.

" சர்வ மங்கள மாங்கல்யே

சிவ சர்வதே சாதிகே

சரண்யா தரம்பிகே கௌரி நாராயணி நமோஸ்துதே"

துர்கைக்கு மிகவும் பிடித்த மந்திரம் இது என்பர்‌.

கௌரி தேவியாய் எழுந்தருளி இருக்கும், தேவியை மீண்டும், மீண்டும் வணங்குகிறேன் என்பது இதன் பொருள். இதை சாதாரணமாக, அடிக்கடி சொல்ல, ஒருவரின் அறிவு திறன், வலிமை, செல்வம், நாவன்மை போன்ற பல நன்மைகள் கைவரப் பெறுவர் என ஆன்றோர், சான்றோர் கூறி வழி வகுத்துள்ளனர்.

பிரிட்டன் தலைநகரம் லண்டனில், மில்டன் கிராஸ் ஆனந்தா கிளப் எனும் ஒரு அமைப்பு, தமது 35வது ஆண்டின் விழாவாக, ஸ்ரீ துர்கா மாதா பூஜைக்காக, வங்க தேசத்திலிருந்து 40 ஜம்தானி ரக புடவைகள், ஸ்ரீ லங்காவிலிருந்து, 108 தேர்ந்தெடுத்தல் தாமரை பஷ்பங்கள்,போன்றவைகளை வரவழைத்து, அலங்கரித்து அசத்தி உள்ளனர். அதுபோல, இஸ்லாமிய நாடான துபாயில் மாடக்ஸ் ஸ்கொயர் எனும் இடத்தில் ஒவ்வோர் வருடமும் ஒரு தீம் வைத்து பூஜை வைபவம் செய்து வருகின்றனர்.

இடர்தரு தொல்லை

இனிமேல் இல்லை

என்று நீ சொல்லிடுவாய்,

சுடர்தரு அமுதே

சுருதிகள் கூறிச்

சுகமும் தந்திடுவாய்,

படர்தரஉ இருளில்

பரிதியாய் வந்து

பழவினை ஓட்டிடுவாய்!

ஸ்ரீ துர்க நிவாரண

அஷ்டகம்‌.

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார், சென்னை.

Whats_app_banner

டாபிக்ஸ்