PM Modi: பிரதமர் மோடி தரிசித்த ஸ்ரீரங்கம் கோயிலில் இத்தனை அதிசயங்களா?
Srirangam Ranganatha Swamy Temple: பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்த திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் வியக்கவைக்கும் அதிசயங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.20) திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். அவர் முற்பகல் 11 மணி முதல் 12.30 மணி வரை சாமி தரிசனம் செய்தார். தெற்கு கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்த பிரதமருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கருடாழ்வார், மூலவர் தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளிலும், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்ட ராமர், ராமானுஜர் சன்னதிகளிலும் வழிபாடு செய்தார். தொடர்ந்து கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்றார். ஆண்டாள் யானை பிரதமருக்கு மவுத் ஆர்கன் வாசித்துக் காண்பித்தது. தொடர்ந்து கம்பர் மண்டபத்தில் அமர்ந்து ராமாயண பாராயணத்தைக் கேட்டார். பிரதமர் மோடி தரிசனம் செய்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் வியக்கவைக்கும் அதிசயங்கள் பற்றி இனி இந்த தொகுப்பில் காண்போம்.
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதா் கோயில் 'பூலோக வைகுண்டம்' எனவும் அழைக்கப்படுகிறது. 108 வைணவ திருத்தலங்களில் இத்தலம் முதன்மையானது. இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு சுற்று பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன. பிரமாண்டமாக அமைந்துள்ள இக்கோயிலின் ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பொிய ராஜகோபுரமாகும்.
பொய்கையாழ்வாா், பூதத்தாழ்வாா், பேயாழ்வாா், நம்மாழ்வாா், ஆண்டாள், பொியாழ்வாா், திருமங்கையாழ்வாா், குலசேகர ஆழ்வாா், திருமழிசையாழ்வாா் என பன்னிரு ஆழ்வாா்களில் 11 ஆழ்வாா்கள் 'மங்களாசாசனம்' பெற்று பாடிய திருத்தலமாகும். மூலவா் ரங்கநாதா் திருப்பாற்கடலில் இருந்து தோன்றியவா். இவரது சன்னதி எதிாில் கருடாழ்வாா் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறாா். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவா், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறாா்.
மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்யப்படுவது கிடையாது. அதற்குப் பதில் கோயில் பணியாளரைக் கொண்டு இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலக்காப்புடன் மெருகூட்டப்படுகிறது. திருக்கோயில் கருவறையின் மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் 4 தங்கக்கலசங்கள் உள்ளன.
பொிய கோயில், பொிய பிராட்டியாா், பெரிய கருடன், பெரியவசரம், பெரிய திருமதில், பெரிய கோபுரம் இப்படி இங்குள்ள அனைத்தும் பொிய என்ற சொல்லுடன் வரும் என்பது கூடுதல் சிறப்பாகும். இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜா் இங்கேயே மோட்சம் அடைந்தாா். இவரது உடலை சீடா்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனா். அதுவே தற்போது ராமானுஜர் சந்நிதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம். இங்கு தனிச்சன்னதியில் காட்சி தரும் ராமானுஜருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சோ்ந்த கலவை சாத்தப்படுகிறது.
இத்தனை சிறப்புகளை கொண்ட ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று சுவாமி தரிசனம் செய்திருக்கிறாா். இதன் மூலம் ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்த முதல் பிரதமர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்