Onam: ஆவணி மாதம் ஹஸ்தம் முதல் திருவோண நட்சத்திரம் வரையிலான 10 நாட்கள்-ஓணம் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம்
அது மகாபலியின் தாத்தா பக்த பிரஹலாதனுக்கு காட்சி அளித்த நரசிம்ஹம் போல இல்லாது, மிகவும் சாந்த சொரூபியாக, வாமனனாக பிரத்யோகமாக தனியான வாமன அவதாரம் எடுத்து, மகாபலியின் மாட்சிமை, மாண்பு இவைகள் பாதிக்காதவாறு முக்தி கொடுக்க இசைந்தார்.
கி.பி 868 தேதியிடப்பட்டு கிடைத்த தாமிரத் தகடு ஒன்று, ஓணம் பண்டிகை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கொண்டாடப்படும் ஒரு விசேஷமான பண்டிகை என்பதைப் பறை சாற்றிக் கொண்டுள்ளது. உலகமெங்கும் வாழும் மளையாள மொழி பேசும் மக்கள், இதனைப் பெரும் சிறப்பாகக் கொண்டாடடுவர்.
கேரள மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம், ஹஸ்தம் முதல் திருவோண நட்சத்திரம் வரையிலான பத்து நாட்கள், தினம் ஒரு பெயரில் ஓணத்தை சிறப்பாக கொண்டாடுவர். முதல் நாள் அத்தம், 2ம் நாள் சித்திரா, 3ம் நாள் சுவாதி, 4ம் நாள் விசாகம் இப்படியே திருவோண நாளான 10 ம் நாள் ஓணம் கொண்டாடி விழா முடிவடையும்.
அறத்திற்கு அன்பு சார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை என்கிறது திருக்குறள். அன்பின் துணையால்தான், நல்வினைகள் நிகழ்கிறது. அதேபோல் தீவினைகள் பல நீங்குவதற்கும் அதுவே காரணமாகிறது.
"உயிர்களிடத்து அன்பு வேணும்-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்-
வயிரமுடைய நெஞ்சு
வேணும்- இது
வாழும் முறைமையடி பாப்பா" என்பார் மகாகவி பாரதியார்.
இப்படி அன்பையே அறணாகக் கொண்டு, நல்லாட்சி
புரிந்து, இறைவன்
இறைஞ்ச
இல்லையென்னாது தந்து
முக்தி பெற்ற மகாபலி
மன்னனின் மாறாத அன்பின்
நினைவு கொண்டு, அன்னாரை, மிக ஆர்வமாக வரவேற்கும் உண்ணத பண்டிகையிது..
ஒரு எலி, அவ்வூர் சிவன் ஆலயத்தில், அணைந்து போக இருந்த விளக்குத் திரியைத் தூண்டி விட, விளக்கு பிரஹாசமாய் எரிந்தது. இதைக் கண்ட, சிவபெருமான் அன்பு மிகக் கொண்டு, அடுத்த பிறவியில் அது ஓர் அரசனாகப் பிறக்க வரம் அருளினார். அதே போல, அடுத்த பிறவியில் அது மன்னாதி மன்னனாக, சக்ரவர்த்தியாகப் பிறந்து, மக்களால் போற்றித் துதிக்கப் படுகின்ற, அறமே வடிவான, வள்ளல் மகாபலி சக்கரவர்த்தியாக ஆயினர். "மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி" என்பதைப் போல, மக்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்து "குறையொன்றும் இல்லை. மறை மூர்த்தி கண்ணா" என்பதைப்போல இருந்தது அவர்களின் வாழ்க்கைப் பாதை.
அதே நேரத்தில், திதி, காசிப முனிவர் தம்பதிக்கு, அவரின் வேண்டுகோளை ஏற்று, அது நிறைவேற, திருமாலே அந்த தம்பதியருக்கு மகனாகப் பிறந்து, வாமனனாக வளர, இந்திரன் மற்றும் தேவர்கள் வேண்டுகோளை ஏற்று, உலகம் உய்ய, மகாபலிக்கு முக்தி தர விரும்பினார்.
அது மகாபலியின் தாத்தா பக்த பிரஹலாதனுக்கு காட்சி அளித்த நரசிம்ஹம் போல இல்லாது, மிகவும் சாந்த சொரூபியாக, வாமனனாக பிரத்யோகமாக தனியான வாமன அவதாரம் எடுத்து, மகாபலியின் மாட்சிமை, மாண்பு இவைகள் பாதிக்காதவாறு முக்தி கொடுக்க இசைந்தார்.
"என்மீது அபார பக்தியும், பாச நேசமும், நம்பிக்கையும் வைத்திருக்கும், உனது வம்சத்தைச் சேர்ந்த எவரையும் கொல்ல மாட்டேன்"என மகாபலி சக்ரவர்த்தயின் தாத்தாவான, பக்தப் பிரஹலாதனுக்கு, மகாவிஷ்ணு கொடுத்த வரம் காரணமாக, பாணா அசுரனை கொல்லவில்லை. அவருக்கு மோட்சம் கொடுக்கவே திரிவிக்கிரம அவதாரம் எடுத்து வாமன ரூபமாய் அருள்மழை பொழிந்து, மன்னனை மகிழ்வித்தார்.
வாமனனாக வந்து, ஓங்கி உலகளந்ததொரு பெருமாளாக, வளர்ந்து மகா விஷ்ணு மூன்றடி இடத்தை தானமாக கேட்க, மகாபலி, நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி என்பது நம்பிக்கை உள்ளோர் இடம் மட்டுமே வரும் என்பதற்கொப்ப, அந்த சூழ்நிலையை, வந்திருப்பது யாராக இருக்கும் என யூகித்து, மகிழ்வுடன், கேட்ட இடம் தர சம்மதித்தார் மகாபலி சக்கரவர்த்தி.
பேரரசன் மகாபலியிடம் தானம் கேட்க வந்திருப்பது பகவானே என்றுணர்ந்த, குரு சுக்ராச்சார்யார். மன்னர் இறுதியைதடுத்தும் கேளாது நடந்துகொள்ள, குரு, வண்டு வடிவம் கொண்டு, தாரை வார்த்து தருகின்ற நீர் நிறைந்த கமண்டலத்தில், வாய் புறம் பதுங்கி, துவாரம் அடைபட, வாமன சிறுவரோ, ஒரு தர்ப்பைப் புல் எடுத்து அங்கு குத்த, ஆச்சார்யாரின் ஒரு கண்ணை பதம் பார்க்க, அவர் தப்பித்து வெளியேறி கண்குருதியுடன் ஓடினார்.
மஹாவிஷ்ணு இரண்டு அடிகளில் பூமியையும், வானத்தையும் அளந்தபின், மூன்றாவது அடிக்கு, மகாபலி, தனது தலையையே இடமாகக் கொடுக்க, எம்பெருமான் திரிவிக்ரமனாய் விரிந்து, தம் திருவடியால் அழுத்தி பாதாள உலகிற்கு அனுப்பி வைத்தார்.
"மிக்கப் பெரும் புகழ் மாவேலி வேள்வியில்,
தக்கதி தன்னென்று,
தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத்
துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே" என்று அச்சோ பருவத்தில், திரு மொழியில் பெரியாழ்வார் சிலாகித்து பாடுவார் .
அத்தப்பூ கோலம் இப்பண்டிகையின் முக்கிய அம்சமாகும். இதை கேரள மக்கள் பூக்களின் திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வர். தினமும் வெவ்வேறு வண்ணப் புது மலர்களால் எங்கும் அலங்கரிப்பார்கள். அத்திப்பூ தவிர 10ம் நாள் பூக்கோலம் மிகப் பெரிய அளவாதலால், தும்பை, காசி, அரிப்பு, சங்குப் பூ போன்ற பூக்களும் இடம் பெற்று கண்ணைக் கவரும் பூக்கோலமாக மிளிரும். இச்சமயத்தில் கேரள பூ வியாபாரிகள், குமரி மாவட்டம், தோவாளை பூ சந்தைக்த வந்து பரஸ்பரம் நட்பு பாராட்டி பூக்களை வாங்கிச் செல்வர்.
ஓணம் பண்டிகையின் முக்கிய இன்னோரு தவிர்க்க முடியாத விஷயம், "ஓண சாத்யா"என்பது. சுமார் 64 வகைகளிலாலான பெரிய தடபுடல் விருந்து சாப்பாடு இது. காலன், ஓலன் எரிசேரி, இஞ்சிப் புளி, ரசம், பப்படம், அடைப் பிரதமன், பாயச பாலாடைப் பிரதமன், இஞ்சிக்கறி, தோரன், சக்கை வரட்டி இப்படி ஒரு பெரும் வரிசைகட்டும் விருந்து. இது சமயங்களில் அனைத்து இடங்களிலும் உள்ள ஓட்டல் வணிகத்தின் விளம்பரம் மூலம் அழைக்க, வீடுகளில் கொண்டாடுவர் கூட, இது அனைவருக்குமான அரிய விருந்தாக அமைகிறது.
அனைவரும் சேர்ந்தாடும் ஓணக்களி நடனம் அழகின் சாம்ராஜ்யம்."புலிக்களி" என்றும்"கடுவக்களி"எனவும் இதனை அழைப்பார்கள். திரிச்சூர் எனும் ஊரில் இது மிக விமரிசையாக இருக்கும் என்பார்கள். ராம வர்ம சக்தன் எனும் பெயர் கொண்ட மன்னன், இதை ஆரம்பித்து வைத்ததாகக் கூறுவர். புலி வேடமிட்டு, பல வர்ணஜாலங்களில் ஒலிக்கு ஏற்ப ஆடும் நடனம் பார்க்க திகட்டாதது. இது தவிர பல பல பெண்கள் சேர்ந்து ஆடும் கை கொட்டுக்களி. நடனம் கசவு எனும் வெண்நிற ஆடை அணிந்து பாடல்கள் பாடியபடி ஆடுவர். மன்னன் மகாபலியை அவர் புகழைப் பாடி வரவேற்கும் தன்மையில் பாடல்களை அமைத்திருப்பார்கள். இதை காண வெளிநாட்டினர் பலரும் வந்து மகிழ்வர்.
சாதாரணமாகவே யானைக் கூட்டமும், விழாக்களில் பங்கு பெறும் முறையும் அதிகமுள்ள கேரளாவில் திருவோண விழாக்களில் தவறாமல் இடம் பெறும். 10ம் நாள் திருவோணத்தன்று, பொன் மணிகள், தங்க கவசங்களை அணிவித்து அலங்காரம் செய்து,வண்ண பூத்தோரணங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட, வீதிகளில் ஊர்வலம் வரும் அழகு காண அற்புதக் காட்சி!
இது தவிர பற்பல விளையாட்டு, நடனப் போட்டிகளும் களைகட்டும். சாதி சமயமற்ற, ஏழை பணக்காரன் எனும் பேதம் இல்லாத அனைத்து சமூகத்தினரும் இணைந்து கொண்டாடும் தேசிய பெருவிழா இது என்றே சொல்லலாம்.
சங்க கால ஏடுகள் இவ்விழா பற்றிய செய்திகளைச் சொல்கிறது. உலக நன்மைக்காக 3அடி யாசகமாகநிலம் கேட்டு மகா விஷ்ணு உத்தமன் எனும் பிரிவில் சேர்கிறார்.
"ஓங்கி உலகளந்த உத்தமனாய், திரிவிக்கிரம அவதாரம் எடுத்தவனே, உனக்குத் தாலாட்டு"என்று பெரியாழ்வார் தமது திரு மொழியில் தாலாட்டுப் பாடி பரவசமடைவார்.
தன் மார்பில் செல்வத்தின் அதிபதியை வைத்துக் கொண்டு யாசகம் கேட்க தயக்கம் ஏற்பட, கருப்பு நிறம் கொண்ட கிருஷ்ணார்ஜுனம் எனும் போர்வையைப் போர்த்தி, மார்பை மறைத்து மகாபலியிடம் சென்றதாக வரலாறு.
இந்த அவதாரத்தில், வாமனர், காலைத் தூக்கியதும், அது, சத்ய லோகத்தை அடைய, அதை தரிசித்த பிரம்மா, புனித நீரால் பூஜை செய்து வழிபட்டாராம். வாமனருக்கு "தீர்த்த பாதா" என்ற பெயர் உண்டு. ஆகவே, இவரின் வரலாற்றைப் படிக்க மழை வரும் என்பது ஐதீகம். இவ்விழாவின் 5ம் நாள் அனுஷம். இன்று புகழ்பெற்ற ஓணம் போட்டிகள் நடைபெறும் பாம்பு ஓடங்கள் பவனிவர பல்லாயிரம் பேர் பார்க்க, ஆடல் பாடலுடன் வேகம் களை கட்டும். இதை தேசிய விளையாட்டாக அங்கீகாரம் செய்திருப்பதாக கூறுவர். ஒரு முறை முன்னாள் பாரதப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள், இப் போட்டியைக் கண்டு மகிழ்ந்தார் என அறிகிறோம்.
இப்பண்டிகை தினங்களில் உற்றார்கள், உறவினருக்கு, நெருங்கிய நண்பர்கள் ஆகியோர்க்கு வேண்டியபடி பாரம்பரியமான முண்டுகள், கைத்தறி புடவைகள், வேஷ்டிகள், கசவு புடவைகள் ஆகியனவும், "அறன்முலா கண்ணாடி" இது உலோகத்தால் ஆனது.
லக்ஷ்மி சரஸ்வதி,விநாயகர் உருவங்கள் பொறித்த தங்க, வெள்ளிக் காசுகள், இது தவிர, விளக்குகள், பரா எனப்படும் அளவைப் பாத்திரம், வல்லம் எனும் சிறிய படகு வடிவம், நெட்டூர் பெட்டி எனும், சிறிய நகை வைக்கும் பெட்டிகள் போன்ற பல வகை பரிசுகள் கொடுத்து மகிழ்வார்கள்.
மொழிவழி பிராந்தியங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பே தமிழ் நாட்டிலும் இவ்விழா கொண்டாடப்பட்டது.
பாற்கடலில், மற்றுமொரு பாரிஜாத விருட்சமாக அழகுடன் காட்சி தந்த, உயர்ந்த புண்ணியத்தைத் தர வல்லதுமான. தனது பார்வையினால் பெரிய கடாக்ஷம் அருளும், லக்ஷ்மி பதியான மகாவிஷ்ணுவை, வாமனனாக காட்சிதந்து அருளும் தலங்கள் இங்கும் உண்டு. காஞ்சிபுரம் உலகளந்த பெருமாளாக, மாவேலித் தலைமீது கால் வைத்தபடி, இடது காலை உயரத் தூக்கி இருப்பதை, திருக்கோவலூர் திவ்யதேச பெருமாள் இடது காலைத் தூக்கி, வலது காலை பூமியில் ஊன்றி, வலது கரத்தில் சங்கும், இடதில் சக்கரமும் கொண்டிருப்பதை காழிசீராம விண்ணகரத்தில் சிறிய திருமேனியும் வரம் தரும் வரத ஹஸ்த்தத்தடன் இருப்பதையும், திருநீர்மலை உலகளந்த பெருமாளாக, ஸ்ரீரங்கத்தில் சிறிய மூர்த்தியாக கையில் குடையுடன் திருக்குறளப்பனாக, மேலும் பல இடங்களிலும் காட்சி தரும் வாமனர் சேவையை தரிசித்து அருள் பெறலாம்.
மன்னர் மஹாபலி, விஷ்ணு பகவானிடம் கேட்டு பெற்ற வரம் பிரகாரம், ஒவ்வொரு வருடமும், கேரளம் வந்து, தம் மக்கள் மகிழ்ச்சியில் பங்கு கொண்டு, அவர்களை நன்கு ஆசீர்வதித்து செல்வார் எனும் தளராத முழு நம்பிக்கையின் வெளிப்பாடே இப் பொன் ஓணத்தின் அடித்தளம். இந்த திருவோண நன்னாளில் சக்ரவர்த்தி மஹாபலியை வரவேற்று, உபசரித்து, அவர் மனம் மகிழ ஆசிகள் பெற்று வாழவே இப் பண்டிகையை இத்துணை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்கு இறை என்று வைக்கப்படும் "என நம் தெய்வப் புலவர் கூறியது உண்மையாகிறது இப்பண்டிகையில் சென்னையிலும், பல்வேறு இடங்களில், ஓணம் விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. மயிலாப்பூர் பாரதீய வித்யாபவனில் ஒருவாரம் கொண்டாடுவர். கேரளாவில் பிரபலமான மோகினி ஆட்டம், ஒப்பனா ஆட்டம், கொடி ஆட்டம், இப்படி பல நிகழ்வுகளுடன் நாடகங்களும் உண்டு.
இந்த ஆண்டு மோகினியாட்டம், திருமாலை நினைத்து, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் பூண்ட வாழ்க்கையை மிக சிறப்பாக "கண்டேன் ஸ்வப்னம்" எனும் நடனக் காட்சிகளில் கண்களுக்கு விருந்தளித்தனர். அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு அலங்காரங்கள், ஆராதனை மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்துவர். இந்தப் பண்டிகை நன்னாளில், நாமும், ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி வணங்கி, நலங்கள் பலவும் பெற்று வாழ்வோம்.
-கி.சுப்பிரமணியன்
ஆன்மிக எழுத்தாளர்,
அடையார், சென்னை.
டாபிக்ஸ்