ஏழைகளின் திருநள்ளாறு நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோயில்!
நங்கை மொழி காளத்தீஸ்வரர் சிவன் கோயில் குறித்து இங்கே காணலாம்.
திருச்செந்தூர் அருகில் உள்ள நங்கை மொழி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது தென்னகத்து காளஹஸ்தி என அழைக்கப்படும் காளத்தீஸ்வரர் சிவன் கோயில். இந்த கோயிலானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர் காலத்தில் வாழ்ந்த நங்கை, சேவா என்ற இரண்டு ராணிகளால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.
குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த இவ்விரு ராணிகளிடத்தில் வில்வ மரத்தடியிலிருந்த சித்தர் கூறியதை அடுத்து பாம்புப் புற்றுக்குப் பால் அபிஷேகம் செய்ததைத் தொடர்ந்து, அவை லிங்கமாகவும், அம்பாளாகவும் ஒரு மாறியதாகக் கூறப்படுகின்றது.
இக்கோயிலில் உள்ள காளத்தீஸ்வரரை வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியமும், திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும் என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணமடைவார்கள் என்பது ஐதீகம். காளத்தீஸ்வரர் கோயில் பிரகாரத்திற்கு உள்ளே வேண்டிய வரத்தைக் கொடுக்கக் கூடிய ஞானபிரசுன்னாம்பிகை கோயில் உள்ளது.
பிரகாரத்திற்கு வெளியே காளத்தீஸ்வரரை பார்ப்பது போன்று சுமார் இரண்டு அடி உயரமுள்ள நந்தியும் அமைந்துள்ளது. இங்கு வரக்கூடிய பக்தர்கள் நந்தி தேவனை வணங்கிய பின்னரே காளத்தீஸ்வரரை வழிபடுகின்றனர். மேலும் இங்கு அமைந்துள்ள சூரியன், சந்திரன், குரு அடங்கிய 9 நவக்கிரகங்களை 9 முறை சுற்றி வந்து வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகின்றது.
இப்பகுதி மக்களால் ஏழைகளின் திருநள்ளாறு என்றும் இவ்விடம் அழைக்கப்படுகின்றது. இந்த புகழ்பெற்ற காளத்தீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி, ராகு கேது பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, பௌர்ணமி பிரதோஷங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.