கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவது எப்போது? முழு விபரம் இதோ..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவது எப்போது? முழு விபரம் இதோ..!

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவது எப்போது? முழு விபரம் இதோ..!

Karthikeyan S HT Tamil
Apr 09, 2023 09:14 PM IST

Kallazhagar Festival: மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா குறித்த அறிவிப்பை அக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கள்ளழகர்
கள்ளழகர்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள் உலகப் புகழ் பெற்றவையாகும். இந்தாண்டு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி மே 4-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. 

ஏப்ரல் 23-ல் காலை 10-30 முதல் 11.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். தினமும் காலை, மாலை என இருவேளை சுவாமி புறப்பாடு மாசி வீதிகளில் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 2-ம் தேதி காலை 8.35 மணிமுதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது.

அதேபோல் புகழ்பெற்ற கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி திருவிழாவுடன் ஆரம்பமாகிறது. அன்று மாலை 6 மணிக்குமேல் 7 மணிக்குள் தோளுக்கினியானில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி திருவாராதனம் நடைபெறும். அடுத்த நாள் மே 2-ல் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நடைபெறும்.  3-ம் நாள் (மே 3) மாலை 7 மணிக்குமேல் அழகர் கோவிலிலிருந்து சுந்தரராஜ பெருமாள் மதுரைக்கு புறப்படுகிறார். அடுத்து 4-ம் நாள் (மே 4) மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறும். அன்றிரவு தல்லாகுளத்தில் சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். 

அதனைத்தொடர்ந்து மே 5-ல் அதிகாலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் நடைபெறும். அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளல் நடைபெறும்.

மே 6-ல் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கிறார், அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். மே 7-ல் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். அடுத்தநாள் மே 8-ல் மதுரையிலிருந்து கள்ளழகர் அழகர்மலைக்கு புறப்படுகிறார். மே 9-ல் கோயிலை சென்றடைகிறார். மே 10-ல் உற்சவ சாற்று முறையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை வரவேற்பர். திரளும் பக்தர்களுக்கேற்ற வசதிகள் செய்துதர மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பணிகள் நடந்து வருகின்றன.

Whats_app_banner

டாபிக்ஸ்