விளக்கு ஏற்றுவதால் என்ன பயன்?
விளக்கு ஏற்றுவதால் மிகப்பெரிய திருவருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
விளக்கேற்றுவதால் ஏற்படும் பலன்கள் பற்றித் தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும். இறைவழிபாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு அம்சத்தைப் பற்றி சொல்லத் தொடங்கினால் அது நீண்டு கொண்டே போகும்.
விளக்கு ஏற்றுவது என்று சொன்னால் அதிலும்கூட காரணம் உள்ளது. விளக்கு ஏற்றுவதன் மூலம் ஒளி கிடைக்கிறது, இருள் என்பது அறியாமையின் அடையாளம். ஒளி என்பது அறிவின் அடையாளம். சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்குத் தீபத்தின் சுடரில் உதாரணமாகச் சொன்னார்கள் மகான்கள்.
தீபத்தின் சுடர் எப்போதும் மேல் நோக்கியே எரியும் அது போலவே மனிதனும் தனது சிந்தனைகளை மேல்நோக்கி இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் விளக்கேற்றும் வழிமுறையை மகான்கள் போதித்தார்கள்.
தீயர் தலைகீழாகப் பிடித்தாலும் அதன் சுடர் மேலோங்கியிருக்கும். அதுபோலவே தாழ்ந்த நிலை வந்துவிட்டால் மனிதனின் சிந்தனை உயர்ந்து விளங்க வேண்டும். ஆக அறிவின் அடையாளமாகத் திகழும் ஒளியைத் தந்து மேல் நோக்கும் குணத்தை உணர்த்த மேலோங்கிய சுடரைக் கொண்டிருக்கும் விளக்கினை மகான்கள் போற்றினர்.
சரித்திரங்களும் விளக்கு முக்கியத்துவம் பெறுகிறது. காரி நாயனார், நமிநந்தி அடிகள் நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகியோர் விளக்கேற்றிய வரலாறுகள் இங்கு உள்ளது.
இதன் காரணமாகவே “நல்லக விளக்கது நமச்சிவாயவே” என்று திருநாவுக்கரசு நாயனார் பாடி அருளினார். ‘கள்ளப் புலன் ஐந்தும் காணா மணி விளக்கே’ என்று திருமூலநாயனார் பாடியருளினார். ஆழ்வார்களின் பாடல்களிலும் விளக்கு என்கிற சொல் இடம் பெற்றுள்ளது.
காஞ்சிபுரத்தில் ஒரு பெருமானின் பெயர் தீபப் பிரகாசர். அக்னி தலமாகத் திருவண்ணாமலை திகழ்வதும், வாயு ஸ்தலமான காளஹஸ்தியில் கோயிலில் ஒரு சுடர் அசைந்து கொண்டே இருக்கிறது என்பதெல்லாம் எத்தனையோ சிறப்புச் செய்திகள் உள்ளன.
வீட்டு வாசலில் நல்லெண்ணெய் விளக்குகளை ஏற்றி வைத்தால் அங்கே பாம்பு வராது என்று காஞ்சி பெரியவர் கூறியுள்ளார். விநாயகருக்குப் பின்னே அதாவது விநாயகரின் கருவறைச் சுவர் பின்புறமாக விநாயகருக்குப் பின்னே விளக்கேற்றி வைத்தால் படிப்பு நன்றாக வரும்.
ராகு கால நேரத்தில் கோயிலுக்குச் சென்று விநாயகருக்கு நெய்விளக்கு ஏற்றி துர்க்கைக்கு நெய் விளக்கேற்றி ஸ்தோத்திரங்களைச் சொன்னால் ராகு தோஷத்திலிருந்து விடுபடலாம்.
முன்னொரு காலத்திலே ஒரு எலி விளக்கைத் தூண்டி சுடரை ஒளிரச் செய்தது. அதன் காரணமாக அந்த எலி மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறக்குமாறு சிவபெருமான் திருவருள் புரிந்தார்.
இதன்மூலம் விளக்கேற்றுவதால் மிகப்பெரிய திருவருள் கிடைக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆகவே விளக்கினை ஏற்றினால் நல்லருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.