Sabarimala Temple: பக்தர்களுக்காக சபரிமலையில் பிரம்மாண்ட விடுதி !
சபரிமலையில் ஒரே நேரத்தில் 17 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கு ஏற்றவாறு பெரிய விடுதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோயில்களில் கேரள மாநிலத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பக்தர்களின் வருகை குறைவாக இருந்தன.
இந்நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள காரணத்தினால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளன. நவம்பர் 16ஆம் தேதி அன்று நடை திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மொத்தமாக 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ய இக்கோயிலுக்கு வந்துள்ளனர்.
நேற்று (டிசம்பர் 4) விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டு வந்து ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் கோயில் நிர்வாகம் சார்பில் கூடுதல் அறைகள் கொண்ட விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள அறைகளைப் பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் எனக் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 104 அறைகளை இணையம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பொதுவாக ஐயப்ப பக்தர்கள் குழுவாக வருகின்றனர் அதன் காரணமாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகம் பக்தர்கள் தங்குவதற்குக் கூடுதல் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. ஐயப்பன் கோயிலில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஒரே நேரத்தில் 17 ஆயிரம் பேர் தங்குவதற்கு ஏற்றவாறு பிரம்மாண்ட விடுதி உருவாக்கப்பட்டுள்ளன. இங்கே குழுவாக ஒரு பக்தர்கள் தங்கிச் செல்லலாம் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.