கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்!
Kovilpatti Shenbagavalli Amman Temple Panguni Festival: கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பழமை வாய்ந்த செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. மதுரையில் மீனாட்சி அம்பாள் அரசாட்சி செய்வது போலவே, இங்கும் அம்பாளின் அரசாட்சியே நடந்து வருகிறது. சுவாமி, அம்பாளுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
வெம்பக்கோட்டை பகுதியை அரசாண்ட செண்பக பாண்டியன் எனும் மன்னன் இக்கோயிலை எழுப்பியதால் இக்கோயிலில் உள்ள அம்பாளுக்கு செண்பகவல்லி என்ற பெயர் வந்ததாகவும் , 'கோவிற்புரி' என அந்த மன்னன் உருவாக்கிய இந்நகரே பின்னாளில் திருமங்கை நகராகி கோவில்பட்டி என்றானதாகவும் சொல்லப்படுகிறது.
பொன்மலை முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று அகத்தியர் ஏற்படுத்திய தீர்த்தமே இந்த தலத்தில், இந்த தலத்தில் அகத்திய தீர்த்தமாக போற்றப்படுகிறது. இந்த கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி திருவிழா. இந்த ஆண்டு திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனைகள் நடந்து வந்தன. அதுபோல் தினமும் காலை, மாலை இருவேளைகளில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை (ஏப் 13) நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திருவனந்தல் பூஜை, உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
இதைத்தொடர்ந்து அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க, காலை 9.15 மணிக்கு மேல் முதலில் சுவாமி தேரும், அதைத் தொடர்ந்து அம்பாள் தேரும் நிலையத்திலிருந்து புறப்பட்டது. முக்கிய ரத வீதிகளில் பக்தர்களின் பாடல்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்த தேர் பின்னர் மீண்டும் நிலையை அடைந்தது. இதில், கோவில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்வை சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு, மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கர நாராயணன், வட்டாட்சியர் அமுதா, அறநிலைய துறை இணை ஆணையர் அன்புமணி ஆகியோர் தேரோட்டத்தை வடம்பிடித்து தொடங்கி வைத்தனர். நாளை 10வது நாள் திருவிழாவாக தீர்த்தவாரியும், நாளை மறுதினம் (ஏப் 15) தெப்ப உற்சவமும் நடக்கிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்