Chamundi Devi: தீர்ப்பு வழங்கும் சாமுண்டி தேவி - ஆயிரக்கணக்கான பெண்கள் வழிபாடு!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chamundi Devi: தீர்ப்பு வழங்கும் சாமுண்டி தேவி - ஆயிரக்கணக்கான பெண்கள் வழிபாடு!

Chamundi Devi: தீர்ப்பு வழங்கும் சாமுண்டி தேவி - ஆயிரக்கணக்கான பெண்கள் வழிபாடு!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 03, 2023 10:13 AM IST

கேரளா கரிக்ககம் ஸ்ரீ சாமுண்டி தேவி கோயிலில் சிறப்புமிக்க பொங்கல் வழிபாடு நடைபெற்றது.

சாமுண்டி தேவி
சாமுண்டி தேவி

மிகப்பெரிய புண்ணிய ஸ்தலமாக விளங்கும் இந்த சாமுண்டி தேவி திருக்கோயில் ஆனது திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி திருக்கோயிலின் வடமேற்கு திசையிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் பார்வதி புத்தனாறு கரையில் அமைந்துள்ளது.

சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் திருவிழா கடந்த மார்ச் 27ஆம் தேதி அன்று தொடங்கியது. இந்த விழாவில் உச்ச நிகழ்ச்சியான பொங்கல் வழிபாட்டுத் திருவிழா நேற்று நடைபெற்றது.

காலை 10 மணி அளவில் கோயிலில் தலைமை பூசாரி தீயிட்டுப் பொங்கல் வழிபாட்டைத் தொடங்கி வைத்தார். பின்னர் அதனைத் தொடர்ந்து திருக்கோயிலைச் சுற்றி மூன்று கிலோமீட்டர் தூரத்திற்குப் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாட்டுப் பெண்கள் உள்பட லட்சக்கணக்கான பெண்கள் இந்த பொங்கல் வழிபாட்டில் பங்கு பெற்றனர். பின்னர் மதியம் 2.15 மணிக்கு வேண்டுதலாக வைக்கப்பட்ட பொங்கல் அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது.

இந்த விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகம் முழு பொறுப்புடன் செய்து முடித்தனர். இந்த பொங்கல் வழிபாடு திருநாளை ஒட்டி கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்து வசதிகள் செய்து கொடுத்தனர். பாதுகாப்பு வசதிக்காக சுமார் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த கோயிலில் அவதாரமாக வீற்றிருக்கும் சாமுண்டி தேவியின் சிலையானது பஞ்சலோகத்தில் செய்யப்பட்டதாகும். மன்னர் காலத்தில் இருந்து இன்று வரை பல வழக்குகள் சத்திய பிரமாணம் செய்வதன் மூலம் உண்மைகள் நிரூபிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த கோயிலின் சிறப்பு என்னவென்றால் சாமுண்டி தேவி மூன்று வடிவங்களில் காட்சியளிக்கிறார். அதாவது ஸ்ரீ சாமுண்டி தேவி, ஸ்ரீ பால சாமுண்டி தேவி, ஸ்ரீ ரத்த சாமுண்டி தேவி மூன்று வடிவங்களில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

ஆண்டுதோறும் 7 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பொங்கல் வழிபாடு உச்சத் திருவிழாவாகக் கருதப்படுகிறது. அதற்கு முன்தினம் தங்கத்தேரில் சாமுண்டி தேவி கோயிலைச் சுற்றி பவனி வருவது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்