HT Temple SPL: ஞாயிற்றுக்கிழமை 'ஞாயிறு' செல்வோம்-சூரிய பகவான் வழிபட்ட திருத்தலம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Temple Spl: ஞாயிற்றுக்கிழமை 'ஞாயிறு' செல்வோம்-சூரிய பகவான் வழிபட்ட திருத்தலம்!

HT Temple SPL: ஞாயிற்றுக்கிழமை 'ஞாயிறு' செல்வோம்-சூரிய பகவான் வழிபட்ட திருத்தலம்!

Manigandan K T HT Tamil
Apr 28, 2023 05:45 AM IST

Sri Pushparatheswarar Temple: சென்னைக்கு மிக அருகில் அழகிய கிராமம். இந்த கிராமத்தில் ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

ஞாயிறு கிராமத்தில் உள்ள திருத்தலம்
ஞாயிறு கிராமத்தில் உள்ள திருத்தலம்

தமிழகத்தின் தலைநகர் சென்னையின் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஞாயிறு கிராமம்.

'ஞாயிறு நாட்டு சென்னைப் பட்டணம்' வரலாற்றுச் சிறப்பு மிக்கது ஆகும். சூரிய பகவான், பிரம்மாவின் சாபத்தினால் ஏற்பட்ட வினைத் தீர்க்க இத்தல தீர்த்தத்தில் நீராடி, இறைவன்-இறைவியை செந்தாமரை மலர்கள் கொண்டு பூஜை செய்து வழிபட்டதாக வரலாறு. சூரிய பகவான் வழிபாடு செய்ததால், பஞ்சபாஸ்கர தலங்களில் முதன்மைத் தலமாக ஞாயிறு தலம் விளங்குகிறது.

பஞ்ச பாஸ்கர தலங்கள்

*ஞாயிறு-சென்னைக்கு அருகில்

*திருச்சிறுகுடி-நன்னிலம் அருகில்

*திருமங்களகுடி-ஆடுதுறை அருகில்

*திருப்பரிதிநியமம்-நீடாமங்கலம் அருகில்

*தலைஞாயிறு-நாகப்பட்டினம் மாவட்டம்

கோயில் தூணில் உள்ள சிற்பம்
கோயில் தூணில் உள்ள சிற்பம்

ஞாயிறு தலம் குறித்து அறிவோம்

சூரிய பகவானுக்கு சிவசக்தி சமேதராய் செந்தாமரையில் தரிசனம் அளித்து, ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள் புரிந்து வருகிறார் சிவன்.

சூரிய பகவான், தமிழ் வருட பிறப்பு சித்திரை 1ம் தேதியிலிருந்து 7-ம் தேதி வரை காலை 6.10 மணிக்கு உதித்து ஒளிக் கதிர் ரூபமாக வழிபாடு செய்து சுவாமி-அம்பாள் இருவருக்கும் பாத சேவை செய்து, தன் பணியைத் தொடங்குகிறார்.

சிவபெருமானின் தோழர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளின் துணைவியார் ஸ்ரீ சங்கிலியார் அவதரித்த புண்ணிய பூமி ஞாயிறு ஆகும்.

சைவத் திருமறையான பெரிய புராணத்தில் சேக்கிழார், சங்கிலி நாச்சியாரைப் பற்றியும், ஞாயிறு பற்றியும் பெருமையாகப் பாடியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கோயில்
கோயில்

பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர பேரரசர்கள் திருப்பணிக் கண்ட கோயில் இதுவாகும்.

இந்த கிராமத்தில் ஸ்ரீ இரண்யேஸ்வரர் கோயில், கிராம தேவதையான ஸ்ரீ பொன்னியம்மன் கோயில், ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகியவையும் உள்ளன. 13ம் நூற்றாண்டு பழமையான பச்சை மரகத கல்லாலான ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி ஆகிய தெய்வச் சிலைகள் பூமிக்கு அடியில் இருந்து 2002ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி கிடைத்துள்ள அறிய தகவலும் இந்தக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகை மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

தகவல் பலகை
தகவல் பலகை

பலன்கள்

ஞாயிற்றுக்கிழமைதோறும் இந்தத் தலத்தில் அபிஷேக ஆராதனை, தான-தர்மங்களுடன் இறைவனை வழிபாடு செய்துவந்தால் கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இத்தல தீர்த்தம்-சூரிய தீர்த்தம்

தல விருட்சம்-செந்தாமரை

பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தல விருட்சம்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தல விருட்சம்

சித்திரை முதல் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மாத பிறப்பு, ரதசப்தமி, வளர்பிறை சப்தமி திதி, சூரிய கிரகனம், குரு பெயர்ச்சி விழா, மார்கழி திருவாதிரை உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு சூரிய வழிபாடு இங்கு நடைபெறுகிறது.

சூரிய பரிகாரம் செய்ய வேண்டி செல்பவர்கள், பொன்னியம்மன், யோக நரசிம்மர், புஷ்பரதேஸ்வரர், செல்வ விநாயகர், சங்கிலிநாச்சியார் அவதார இல்லம், இரணீஸ்வரர் கோயில் ஆகியவற்றுக்கும் செல்ல வேண்டும் என்று புஷ்பரதேஸ்வரர் கோயில் கோபுர வாசல் முன் பக்கத்தில் பெரிய பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. எப்படி மீதி 4 நான்கு தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற வழிகாட்டியும் வரையப்பட்டுள்ளது.

புஷ்பரதேஸ்வரர் கோயிலின் சுற்றுப் பிரகாரம் விசாலமாக உள்ளது. மிகவும் அமைதியாக கோயிலும் இவ்வூரும் காணப்படுகிறது. இக்கோயிலுக்கு அருகே அதிக மரங்கள் உள்ளதால் காற்று தூய்மையானதாக இருக்கிறது.

ஞாயிறு கிராமம் செல்லும் வழியில் வயல்வெளி
ஞாயிறு கிராமம் செல்லும் வழியில் வயல்வெளி

கோயில் தூண்களில் சிறப்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. ஆதித்தமிழனின் சிற்பக் கலையை காலம்தோறும் தாங்கி நிற்கும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரே இடம் கோயில் தானே!

சூரிய தீர்த்தம் பராமரிப்பு இன்றி உள்ளது. இந்தக் குளத்தை தூர்வாரி பராமரித்தால் சிறப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

பராமரிப்பின்றி இருக்கும் சூரிய தீர்த்தம்
பராமரிப்பின்றி இருக்கும் சூரிய தீர்த்தம்

எப்படி செல்ல வேண்டும்?

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பாடி, மஞ்சம்பாக்கம் வழியாக இந்தக் கிராமத்திற்குச் செல்லலாம். அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தக் கிராமத்திற்கு செல்லும் வழியில் பச்சை பசேல் என வயல் வெளிகள் காணக் கிடைக்கின்றன. இயற்கையான பசுமையான சூழலில் ஒரு ஆன்மிகப் பயணம் செல்ல ஏற்ற இடம் ஞாயிறு கிராமம்.

செங்குன்றத்திலிருந்து 57C, 57J, 114 C, 114G ஆகிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஞாயிறு கிராம் செல்லும் சாலை
ஞாயிறு கிராம் செல்லும் சாலை

கோயில் திறந்திருக்கும் நேரம்

இந்தக் கோயில் சிறப்பு விஷேஷ நாட்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே காலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது.

மற்ற வேலை நாட்களில் செல்ல திட்டமிட்டால் நிதானமாக 7.30 மணிக்கு இருக்குமாறு சென்றால் போதுமானது.

வேலை நாட்களில் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையும், பின்னர் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

பரபரப்பான சென்னை நகருக்கு மிக அருகில் இருக்கும் இந்தக் கோயிலுக்கு ஒரு முறையேனும் சென்று வாருங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்