Vadaranyeswarar Temple: தாண்டவம் ஆடி சிவபெருமான் காளியை வென்ற தலம்!
காரைக்கால் அம்மையாரை அம்மையே என்று இறைவன் அழைத்து சிறப்பித்த தலமாக ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் ஆலயம் விளங்குகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் ஆலயம். காரைக்கால் அம்மையாரை அம்மையே என்று இறைவன் அழைத்து சிறப்பித்த தலமும் இதுவே ஆகும்.
காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியை கீழிருந்து சிவானந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் திருத்தலமே ஸ்ரீவடாரண்யம் என அழைக்கப்படுகின்றது.
இறைவன் காளியுடன் இந்த ஊர்தவ நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. கோயிலின் வெளியே ஐந்துநிலை ராஜகோபுரம், உள்ளே மூன்று நிலை உள்ள இரண்டாவது கோபுரமும் காணப்படுகின்றது. கோயில் மண்டபத்தில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
இங்கு இறைவன் சுயம்புலிங்கமாகவும் காட்சி தருகின்றார். காளிக்கும் சிவபெருமானுக்கும் இடையே நர்த்தன போட்டி ஏற்பட்டபோது ஊர்த்தவ தாண்டவம் ஆடி சிவபெருமான் காளியை அடக்கி வென்றது இந்த திருத்தலத்தில் தான்.
கோயிலில் மூலவராக உள்ள ஸ்ரீவடாரண்யேஸ்வரர் ஊர்த்தவ தாண்டவர் என்றும் அழைக்கப்படுகின்றார். அம்மனோ வண்டார் குழலி அம்மன் என அழைக்கப்படுகின்றாள். இக்கோயிலின் தலைமரமாக ஆலமரம் அமைந்துள்ளது.
உள்பிரகாரங்களில் சித்தி விநாயகர், முருகன், அகோர வீரபத்திரர், நாயன்மார்கள், தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வர,ர் லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை, பஞ்சலிங்கங்கள், சூரியன், சந்திரன், பெருமாள், நவகிரகங்கள், பலி பீடங்கள், நந்தி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.
இறைவன் காலடியில் காரைக்கால் அம்மையார் இன்றும் வாழ்வதாக ஐதீகம். ஸ்ரீவடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்லா வகை இன்பங்களும் கிடைக்கும் என கூறுகிறது தலபுராணம். திருமண தடை, கடன் தொல்லை, சனி தோஷம் நீக்கும் தலமாக இந்த திருத்தலம் விளங்குகின்றது.