ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் சிறப்புகள்!
திருமணத் தடை நீக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் திருக்கோயில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோயில் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் என்ற சிறப்பு உடையது.
தமிழ்நாடு அரசு சின்னத்தில் இக்கோயிலின் 192 அடி உயரக் கோபுரம் தான் இடம்பெற்றுள்ளது என்பது இதன் பெருமைக்கு மைல்கல்லாக விளங்குகிறது.
இச்சிறப்புமிக்க கோயிலின் தூண்களில் ராமன், இலக்குவன், அர்ச்சுனன், கர்ணன், ரதிதேவி, மன்மதன் உள்ளிட்டோரின் சிலைகள் மிக அழகுடன் காட்சியளிக்கின்றனர்.
வடக்கு பிரகாரத்தில் பழைய ஏகாதசி மண்டபம், கண்ணாடி மண்டபம், தைல அறை, உபரி மடப்பள்ளி மற்றும் பரமபத வாசல் ஆகியவை அமைத்துள்ளது. மண்டபத்தின் விதானத்தில் நாயக்கர் கால ராமாயண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 12 ஆழ்வார்களின் ஒருவரான விஷ்ணு சித்தர் பெரியாழ்வாருக்கு மகளாக ஆடி மாதம் பூரண நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆண்டாள் நாச்சியார்.
ரெங்க மன்னரை மணமுடிக்க மார்கழி மாதம் பாவை நோன்பு இருந்து தமிழில் திருப்பாவை இயற்றி ரங்க மன்னரை கரம் பிடித்தார் என்பதும் ஐதீகம். ஸ்ரீ ஆண்டாளுக்குச் சூடி கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை மதுரை சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கும், புரட்டாசி மாதம் திருப்பதி பிரம்மோற்சவத்திற்கும் சாற்றப்படுவது என்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாளின் பிறப்பு விழாவை ஒட்டி நடைபெறும் இக்கோயில் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நான்கு ரத வீதிகளில் வடம் பிடித்து இழுத்து சற்று நேர்த்திக்கடனைச் செலுத்திடுவர்.
இத்தகைய சிறப்புமிக்க ஆண்டாள் நாச்சியாரை வழிபடும் பக்தர்களுக்கு சகல தோஷ திருமணத் தடை விலகிடும் என்பதாலும், குழந்தை வேண்டி வழிபடுபவருக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்திடும் என்பதாலும் இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.