Kaattu Azhagiya Singar: யானைகள் தொந்தரவால் உண்டான தலம்!
ஸ்ரீரங்கம் அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ளது காட்டழகியசிங்கர் திருக்கோயில் ஒரு காலத்தில் இப்பகுதி காடாக இருந்தது. மக்கள் காட்டு யானைகளின் தொந்தரவை சமாளிக்க முடியாமல் நரசிம்மருக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்த பின் யானைகளின் தொந்தரவு குறைந்தது.
அதனால் இங்குள்ள பெருமாள் காட்டழகிய சிங்கர் என பெயர் பெற்றார். ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் ஆகிய கோயில்களின் எல்லை தெய்வம் இவர். இங்கு நரசிம்மர் மேற்கு பார்த்தவாறு தனது இடது தொடையில் லட்சுமி தேவியை அமர வைத்த நிலையில் லட்சுமி நரசிம்மராக காட்சி அளிக்கிறார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும், அதன் உப கோயிலாக விளங்கும் சிங்கப்பெருமாள் கோயிலில் மூலவரான லட்சுமி நரசிம்மருக்கும் செய்யப்படுகின்றன. இங்கு பிரதோஷ காலத்தில் சிறப்பு பூஜைகள் நடப்பது விசேஷம் ஆகும்.
பிரதோஷ காலங்களில் வழிபாடு செய்தால் உத்தியோகம், மகப்பேறு, திருமணத்தடை நீங்கும். இது ஒரு பிரார்த்தனை தலம். சுவாதி நட்சத்திரம் நரசிம்ம பெருமாள் ஜென்ம நட்சத்திரம் அன்று வழிபடுபவர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும், தீராத நோய் தீரும் என்பது ஐதீகம்.
கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தொழில் தடை நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோயில் இது எனக் கூறப்படுகிறது.
செல்லும் வழி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே இந்த கோயில் அமைந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி இந்த கோயிலுக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
திருச்சி மாவட்டத்திலேயே தங்கி இந்த கோயிலுக்கு செல்லலாம் தங்கும் வசதிகள் அனைத்தும் அருகிலேயே உள்ளன.