Kalakodi Sastha: கஷ்டங்கள் நீக்கும் களக்கோடி தர்மசாஸ்தா!
காரக்குறிச்சி களக்கோடி தர்மசாஸ்தா திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.
திருநெல்வேலியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் காரக்குறிச்சியில் அமைந்துள்ள களக்கோடி தர்மசாஸ்தா திருக்கோயில் 65 ஆண்டில் போகர் என்ற மன்னரால் கட்டப்பட்டது. குலதெய்வம் தெரியாதவர்கள் சாஸ்தாவை தங்களது குல தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
பிரம்மாண்டமான இந்த நுழைவு வாயிலில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. முன் மண்டபத்தில் சாஸ்தாவின் வாகனமான யானை வாகனம் அமைந்துள்ளது. கோயிலின் பிரகாரங்களில் நீர்க்கரை, மாடல், நாலடியார், காளி, பேச்சு போன்ற பரிவார தெய்வங்களும் எழுந்தருளியுள்ளனர். இத்திருக்கோயிலின் சுற்றுப்பிராகாரங்கள் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளன.
இடப்புறத்தில் இருந்து வலப்புறமாக வலம் வந்தால் வலப்புறத்தில் வருவதற்குள் ஒரு மிகப்பெரிய பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு வந்தது போன்று கோயில் கட்டப்பட்டுள்ளது. வாழ்க்கையின் அடித்தளத்தில் உள்ளவர்கள் கூட சாஸ்தாவை வந்து வணங்கினால் மேன்மை அடைந்து விடுவார்கள் என்பதை கோயில் கட்டிட அமைப்பு உணர்த்துகின்றது.
இங்கு உள்ள வைரவ சன்னதியில் 41 நாட்கள் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் உள்ள அனைத்து கஷ்டங்களும், துன்பங்களும் மாறும் என பக்தர்கள் நம்புகின்றனர். உள் மண்டபத்தில் வலது புறம் வீரமாத்தாண்ட பிள்ளையாரும், இடதுபுறம் மகாதேவர் லிங்க ரூபத்தில் அருள்பாலிக்கின்றார். கருவறையில் கரியமேக மேனியாக நெற்றியில் திலகம் ஒளி வீசும் கிரீடத்துடன் தர்மசாஸ்தா அழகுற அருள் பாலிக்கின்றார்.
கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் தங்கள் துணைவியருடன் காட்சி தருகின்றனர். ஆண்டு தோறும் மார்கழி மாதம் பங்குனி மாதம் பங்குனி உத்திரம் விழாவும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சாஸ்தாவுக்கு விளக்கேற்றி வணங்கி வந்தால் தீராத வியாதிகள், கடன் தொல்லைகள், நாகதோஷம், திருமண தடை, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர் என மக்கள் நம்பிக்கையுடன் வணங்கி வருகின்றனர்.