Sattainathar temple : 64 பைரவர்களை ஒன்றாக கொண்ட சட்டநாதர்!
சட்டநாதர் என்பவர் 64 பைரவர்களை ஒன்றாக கொண்டவர் என பொருள்படும்.
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கொங்கராயக்குறிச்சி எனும் கிராமம். ஆதிச்சநல்லூரில் புதையுண்ட பூர்வ குடிகள் இவ்வூரைச் சார்ந்தவர்கள் என்றே கூறுவர். இங்குள்ள சட்டநாதர் ஆலயம் வல்லநாடு திருமூலநாதர் ஆலயத்தினை தலைமையிடமாக கொண்ட நவலிங்கபுரத்தில் ஒன்றாக விளங்குகின்றது.
சட்டநாதர் என்பவர் 64 பைரவர்களை ஒன்றாக கொண்டவர் என பொருள்படும் பெண் சீர்காழி என அழைக்கப்படும் இக்கோயில் 19 ஆம் நூற்றாண்டில் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி ஆற்று மணலில் புதைந்து விட்டதாம். சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் மண்ணில் புதைந்து கிடந்த இந்த கோயிலை மக்கள் தோன்றி எடுத்தனர்.
இக்கோயிலில் அஷ்டமி தேய்பிறையில் பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜை செய்தால் வியாபாரம் செழிக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும், திருமண தடை அகலும், குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோயில் உள்ளே சென்றவுடன் வலது பக்கத்தில் பைரவர் சன்னதியும் இடதுபுறம் தக்ஷிணாமூர்த்தியும், கன்னி மூலையில் கன்னி மூல விநாயகரும், இடது புறத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகனும், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரனும் உள்ளனர்.
தெற்கு நோக்கி பொண்ணுருதி அம்மாளும் அருள் பாலிக்கின்றார். ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து வல்லநாடு செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த சட்டநாதர் ஆலயம். ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளத்தில் இருந்து கோயிலுக்கு பேருந்து ஆட்டோ வசதியும் உள்ளது.