Jagannatha Perumal: கலை பொக்கிஷமான ஜெகநாத பெருமாள் கோயில்
ஜெகநாத பெருமாள் கோயில் பழங்கால கலை பொக்கிஷம் என்றால் அது மிகை ஆகாது.
செண்பகராமநல்லூரில் வயல்வெளிகளுக்கு நடுவே இயற்கை எழிலுடன் ஸ்ரீ ஜெகநாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக வைணவ ஸ்தலமான ஜெகநாத பெருமாள் கோயில் பழங்கால கலை பொக்கிஷம் என்றால் அது மிகை ஆகாது.
ஆன்மீகம் மற்றும் கலைகளின் கருவூலமாகத் திகழும் இந்த கோயில் அலங்கார பிரியரான இந்த பெருமாள் ஜெகநாத பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கம்பீரமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
முன்னொரு காலத்தில் கேரளாவை ஆட்சி செய்து வந்த செண்பக ராம வர்மன் பூரியில் உள்ள ஜெகநாத பெருமாள் கோயிலுக்குச் சென்று விட்டு கேரளா திரும்பும் வழியில் இப்பகுதியில் தங்கி இருந்தார். அப்போது இரவில் தூங்கிக் கொண்டிருந்த மன்னரின் கனவில் தோன்றி ஜெகநாத பெருமாள் பூரியில் இருப்பது போலவே இங்கு தனக்குக் கோயில் எழுப்புமாறு ஆணையிட்டார்.
மறுநாள் காலை எழுந்த செண்பகராமவர்மன் பாற்கடல் வாசலுக்கு கான்பூர் வியக்கும் வண்ணம் இக்கோயிலை வடிவமைத்தார். கோயில் பணிக்காக மன்னன் செண்பகராம வர்மனும் இங்கு நீண்ட காலம் தங்கியதால் அவரது பெயராலேயே இந்த ஊர் செண்பகராமநல்லூர் என்று பெயர் பெற்றதாகப் பெரியவர்கள் கூறுகின்றனர்.
கோயிலின் உள்ளே பழமையைப் பறைசாற்றும் வகையில் கோயில் மண்டபம், ஆஸ்தான மண்டபம், சயன மண்டபம் ஆகியவை உள்ளன. அதனை அடுத்து கோயிலின் முன் பகுதியில் மாயக்கலையின் மன்னனான ஜெகநாத பெருமாள் சன்னதி அழகுற அமைந்துள்ளது.
கோயிலைச் சுற்றி வலம் வர உட்பிரகாரங்களும், வெளிப்பிரகாரமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயருக்குத் தனி சன்னதி உள்ளது. ஜெகநாத பெருமாள் சன்னதியில் விஸ்வசேனர் எழுந்தருளியுள்ளார். இந்த கோயிலில் ஆஸ்தான மகா மண்டபங்களில் உள்ள சிலைகள் கண்களைக் கவரும் வகையில் மிகுந்த கலை நுட்பத்துடன் காணப்படுகின்றன.
துவார பாலகர்கள் சிலையில் நரம்புகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் துவார பாலகர்கள் சிலையின் தலையில் அபிஷேகம் செய்தால் அந்த எண்ணெய் துவாரபாலகர்கள் மூக்கு காது வழியாக வழிந்து ஓடுகிறது. இந்த அதிசயம் இன்றளவும் நிகழ்ந்து வருகிறது.
அந்த அளவிற்கு நுட்பமான கலை வேலைப்பாடுகளுடன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பழங்கால எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகளும் இங்கே உள்ளன. இந்த கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா பிரசித்தி பெற்றதாகும். விழாவில் பரந்தாமனான ஜெகநாத பெருமாள் சயன காட்சியைக் காணவும், பரமபத வாசல் திறப்பைக் காணவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகும்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கருட சேவை நிகழ்ச்சி, அனுமன் ஜெயந்தி, திருக்கார்த்திகை தீப விழா, சித்ரா பௌர்ணமி விழா, வைகாசி விசாகம், மார்கழி திருப்பள்ளி எழுச்சி விழா கோலாகலத்துடன் நடைபெற்று வருகிறது.
டாபிக்ஸ்