Lord Kubera temple: சித்திரலேகா குபேர பெருமான்!
சித்திரலேகா உடனுறை குபேர பெருமான் திருக்கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு நேர் எதிரில் சித்திரலேகா உடனுறை குபேர பெருமாள் தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றார். ஆலயத்தின் தபன மண்டபத்தில் 12 ராசிக்காரர்களும் வழிபட மீன் வாகனத்தில் 12 குபேரன் சிலைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அவரவர் ராசிக்குரிய குபேரனை தங்களது ஜனன நட்சத்திரத்தன்று வழிபட்டால் நன்மை ஏற்படும் என பக்தர்கள் நம்புகின்றனர். மேலும் குபேரனுக்கு உகந்த பச்சை வஸ்திரமும், பச்சை குங்குமமும் சாத்தி நிவேதனம் செய்து வழிபட்டால் யோகம் பெருகி தொழிலில் விருத்தி ஏற்படும் என்றும், செல்வ சேமிப்பு மிகுந்த வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.
குபேரனின் ஜென்ம நட்சத்திரம் பூசம் ஆகும். ஒரு முறை குபேரன் தன்னுடைய சக்திகளை இழந்து செல்வங்கள் அனைத்தையும் இழந்த நிலையில் இந்த தலத்தில் உள்ள காமாட்சி அம்மனை வழிபட்டு இழந்த செல்வங்களை மீட்டு எடுத்ததாகவும், அன்றைய தினம் பூரட்டாதி நட்சத்திரமாகும்.
எனவே இங்கு ஒவ்வொரு மாதமும் அந்த நட்சத்திரத்தில் குபேர யாக வேள்வியும் நடைபெறுகின்றன. 96 வகை மூலிகை பொருட்கள் யாக வேள்வியில் போடப்பட்டு மேலும் சித்திரலேகா சமேத குபேர பெருமாளுக்கு அரிசி மாவு நிரம்பிய பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன் மற்றும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட புனித நீரால் அபிஷேகமும் செய்யப்பட்டு, பல்வேறு மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அலங்காரம் மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெறுகிறது.
கடன் பிரச்னை தீரும், செல்வ வளம் பெருகும் என்பதால் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குபேர பெருமானை தரிசனம் செய்கின்றனர்