குலதெய்வம் தெரியாதவர்கள் வழிபடும் ஸ்ரீ வன துர்க்கையம்மன்!
கதிராமங்கலம் ஸ்ரீ வன துர்க்கையம்மன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலத்தில் அமைந்துள்ளது வனதுர்க்கை அம்மன் கோயில். சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்களுக்குத் தொடர்ந்து துன்பங்களைத் தொடர்ந்து தந்து கொண்டிருந்த அசுரர்களை அழிக்கவும், இடைவிடாத பூஜித்த மும்மூர்த்திகளின் துன்பங்களை போக்கவும் எடுத்த அவதாரமே வனதுர்க்கை அவதாரமாகும்.
தமிழ்நாட்டில் வனதுர்க்கைக்கு எனத் தனி சன்னதி இங்கு மட்டும்தான் அமைந்துள்ளது. பொதுவாகக் கோயில்களில் துர்க்கை அம்மன் வடக்கு அல்லது தெற்கு நோக்கியே காட்சி தருவாள். ஆனால் இங்குள்ள துர்கையோ கிழக்கு நோக்கி அமர்ந்து காட்சி அளிக்கிறாள்.
அம்மனின் வலது கை சாய்த்து அபயஹஸ்தம், வரதம் என இரண்டு முத்திரைகளைக் காட்டி அருள் பாலித்தது வேறு எந்த கோயில்களிலும் இல்லாத தனிச் சிறப்பாகும். நுழைவாயிலின் இருபுறங்களிலும் துவார பாலகிகள் உள்ளன.
எல்லா கோயில்களிலும் உள்ள விநாயகர், முருகன் சிலைகள் இங்கு கிடையாது. அனைத்து நாட்களிலும் ராகு காலத்தில் அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தி இங்குப் பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரை ஆடி மாதங்களில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். குலதெய்வம் தெரியாதவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபடலாம்.
குடும்ப விருத்திக்காகச் சந்தன அபிஷேகமும், எதிரிகளின் தொந்தரவு நீங்கக் குங்கும காப்பு சாற்றியும், செவ்வரளி அர்ச்சனை செய்தும் அம்மனை பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர். மேலும் திருமணத் தடைகள் குடும்ப பிரச்னைகள் நீங்குவதுடன், காரியங்கள் சித்தி அடையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் மயிலாடுதுறையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது.