அம்மை நோயோடு சிறுமியாக வந்த அம்மன்!
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் குறித்து இங்கே காண்போம்.
செட்டிநாட்டுச் சீமை என்று அழைக்கப்படும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது முத்து மாரியம்மன் கோயில். 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலில் மூலஸ்தானத்தில் நின்ற கோணத்தில் மூலவரான முத்து மாரியம்மன் காட்சியளிக்கின்றார்.
கருணை ததும்பும் விழிகள், பார்ப்போரைப் பரவசமூட்டும் வதனம், சந்தனக் காப்பில் ஒளிவிடும் திருமேனி எனப் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்து வருகின்றார். 1956 ஆம் ஆண்டு லலிதா என்ற எட்டு வயது சிறுமியாக அவதரித்த அம்மன், உடல் முழுவதும் அம்மையுடன் வந்ததாகவும் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் தல வரலாறு கூறுகின்றது.
தன்னை கிண்டல் செய்தவர்களின் வீட்டின் பின்புறம் தக்காளிப் பழம் இருப்பதாகச் சிறுமி கூற தக்காளிச் செடியே இல்லை பிறகு எப்படி தக்காளிப் பழம் எனச் சென்று பார்த்தவர்கள், அங்குத் தக்காளிச் செடியில் பழம் இருந்ததைக் கண்டு உண்மையைப் புரிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அன்று முதல் அங்கு ஆலயம் அமைத்து பக்தர்கள் வணங்கி வருவதாகக் கூறப்படுகிறது. முத்து முத்தாக அம்மையுடன் சிறுமி வந்ததால் அம்மன் முத்துமாரியம்மன் என்று வழங்கப்படுகின்றார். இக்கோயிலின் முக்கிய விழாவாக மாசி மாத கடைசி செவ்வாய்க்கிழமை அன்று அம்பாளுக்குக் காப்புக் கட்டி திருவிழா தொடங்கும்.
பங்குனி மாதம் முதல் செவ்வாய் மற்றும் எட்டாம் நாள் அம்பாளுக்குப் பொங்கல் வைத்து அபிஷேகமும், முளைப்பாரி கரகம், அக்னி சட்டி எடுத்தல், பால்குடம் சுமத்தல், பூக்குழி இறங்குதல் என விழா சிறப்புடன் நடைபெறும். இதில் தமிழக மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்பது சிறப்பம்சமாகும்.
திருமணத் தடை, குழந்தை பாக்கியம் வேண்டி நாள்தோறும் பெண்கள் விரதம் இருந்து நன்மை பெற்றுள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.