Chitharal Rock Jain: நாம் அவசியம் காண வேண்டிய கோயில்
கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்தில் சிதறால் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த சமண குடைவரைக் கோயில்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை வனப்பை அரணாக கொண்டு கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்தில் சிதறால் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த சமண குடைவரைக் கோயில். இதை பகவதி அம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டுக்குள் மலை உச்சியில் உள்ள பாறையை உடைந்து இந்த குடைவரைக் கோயில்கள் உருவாக்கப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. மேலும் பாடசாலையாகவும் இக்கோயில் விளங்கியதாக கூறப்படுகிறது.
கிபி 610 - 640 ஆம் ஆண்டு காலத்தில் முதலாம் மகேந்திர வர்ம பல்லவன் இக்கிராம சுற்று வட்டாரத்தில் சமணர்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இக்கோயில் மேலும் மேம்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பின்னர் 13 ஆம் நூற்றாண்டுக்கு பின்பு பத்மாவதி என்ற பகவதி அம்மனை பிரதிஷ்டை செய்து அதன் பிறகு இந்து சமய கோயிலாக உப தெய்வமாக நாகரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இங்கு கலை நயத்துடன் மண்டப தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மற்றும் ஒற்றை சுவரில் மகாவீரர், பாரசுவநாதர், தீர்த்தங்கரர்கள், பத்மாவதி போன்ற சிற்பங்கள் பக்தர்களையும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்கின்றன.
மேலும் எந்த காலத்திலும் வற்றாத வகையில் கோயில் முன்புறம் ஒரு குளமும், பின்புறம் ஒரு குளமும் அமையப் பெற்றுள்ளது காண்போரை வியக்க செய்கின்றது. தற்போது மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் காலை, மாலை என இரு நேரங்களும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
தனித்தன்மை காணப்படுகின்ற இந்த கோயிலில் பழங்கால கல்வெட்டுகளும், தமிழ் கல்வெட்டுகளும், பழங்கால பொருட்களும் அதிகம் காணப்படுகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் சிதறால் மலையில் அமைந்துள்ள இக்கோயிலால் மொத்த மலையும் தெய்வீக தன்மை கொண்டு விளங்குவதாக பக்தர்கள் மெய் சிலிர்த்து கூறுகின்றனர். நாம் அவசியம் காண வேண்டிய கோயில்களில் சிதறால் மலைக்கோயில் ஒன்று எனக் கூறலாம்.