கல்வியறிவு அருளும் அருள்மிகு அகஸ்தீஸ்வரர்!
உலோபாமுத்திரை அம்பாள் சமேத அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோயில் சிறப்புகள் குறித்துக் காணலாம்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு லோப முத்திரை அம்பாள் சமேத அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில். கோயிலில் அகத்தியர் நின்று கோலத்தில் வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் சென் முத்திரை காட்டியபடி காட்சி தருகின்றார்.
சிவதலங்களில் எம்பெருமானுக்கு நடப்பது போலவே உற்சவர் அகத்தியருக்கும் உலோபாமுத்திரை தாயாருக்கும் இங்குப் பூஜைகள் நடைபெறுகின்றன. கோயிலில் விநாயகர், நந்தி, தட்சிணாமூர்த்தி, முருகர் வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கின்றார். துர்க்கை, பைரவர், நவகிரகங்கள் போன்ற தெய்வங்களும் பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.
மேலும் இக்கோயிலின் கோபுரங்களில் நேதாஜி, மகாத்மா காந்தி போன்ற தலைவர்களின் சிலைகளும் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, திருக்கல்யாணம், கார்த்திகை மாத கார்த்திகை தீப திருவிழா, ஸ்ரீ மகாதேவாஷ்டமி, சோமவார பூஜை போன்றவை இங்கு நடைபெறுகின்றது.
மேலும் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி, ஆருத்ரா தரிசனம், தை மாதம் மாதப் பிறப்பு அபிஷேகம் சுவாமி எழுந்தருளி சக்கர வீதி உலா, பங்குனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா, சிறப்புப் பூஜை, அலங்காரம் ஆராதனை எனத் தினமும் சக்கர வீதி உலா இங்கு நடைபெறுகின்றது.
செவ்வாய்க்கிழமைகளில் ராகு கால பூஜையும், பைரவருக்குப் பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. பிரதோஷ நாட்களில் நம்பிக்கை சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெறுகின்றது. திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும் என்றும், மாணவ மாணவியருக்குக் கல்வி அறிவு வளர குரு பகவானுக்குச் சிறப்புப் பிரார்த்தனை செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.