Andarkuppam Murugan: மூன்று விதமான வடிவங்களில் முருகன்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Andarkuppam Murugan: மூன்று விதமான வடிவங்களில் முருகன்!

Andarkuppam Murugan: மூன்று விதமான வடிவங்களில் முருகன்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 31, 2022 02:22 PM IST

முருகன் குழந்தையாகவும், இளைஞராகவும், முதியவராகவும் மூன்று விதமான வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில்
ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில்

பால பருவத்தில் உலகத்தை சுற்றி வந்த முருகன் கருணையாலும், வீரத்தாலும் உலகை ஆண்டு ஊரில் குடிகொண்டதால் ஆண்டார்குப்பம் என பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

தல வரலாறு

கைலாயம் சென்ற பிரம்மன் அங்கிருந்த முருகனை கவனிக்காமல் சென்றபோது, பிரம்மனை அழைத்த முருகன் நீங்கள் யார்? என கேட்க நான் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மன் என அதிகார தோரணையுடன் பதிலளித்தார். அவரது அகங்காரத்தை போக்க நினைத்த முருகன் படைக்கும் தொழிலை எதன் அடிப்படையில் செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்ப ஓம் என கூறி அதன் பொருள் தெரியாமல் நின்றார்.

அதனால் பிரம்மனை முருகன் சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது. இரண்டு கைகளை இடுப்பில் வைத்து அதிகாரத்துடன் பிரம்மனை கேள்வி கேட்ட வடிவிலேயே இத்திருத்தலத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சி தருகிறார்.

இதேபோன்று முருகனை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர் இங்கு நீராட இடம் உள்ளதா என ஆண்டி கோலத்தில் இருந்த சிறுவனிடம் கேட்க தன் கையில் இருந்த வேலாயுதத்தால் தரையில் குத்திய போது நீர் பெருக்கெடுத்ததாம். ஆண்டி வடிவில் இருந்த சிறுவன் முருகப்பெருமானாக காட்சி தந்ததை எடுத்து வேலாயுதத்தில் உருவான தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

கிளியாய் மாறிய அருணகிரிநாதர் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக இத்தலம் இருக்கிறது. கிழக்கு நோக்கி பாலசுப்பிரமணியராக நின்ற கோலத்தில் காற்று தரும் சுவாமிக்கு இட வலமாக வள்ளி தெய்வானை என இரண்டு தேவியர்களின் சன்னதிகள் அமைந்துள்ளன.

வரசக்தி விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நடராஜர் சன்னதிகள் அமைந்துள்ளன. காலையில் தரிசிக்கும் போது இளம் பாலகனின் சாயலும், உச்சி வேளையில் நடுத்தர வயதுடைய தோற்றமும், இரவு வேளையில் வயோதிக தோற்றத்துடனும் மூலவர் காட்சி தருவதால் முருகனை மூன்று வேலையும் மனம் குளிரக்கண்டு பக்தர்கள் வழிபடுகின்றனர்.

தலவிருட்சமாக சரக்குன்றை மரம் உள்ளது. முருகப் பெருமானை வேண்டினால் நினைத்த காரியம் நிறைவேறும் என நம்புவதால் பாலாபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாத்தியும், நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் மொட்டை அடித்தும், காவடி ஏந்தியும் வேண்டுதலை செலுத்துகின்றனர்.

செல்லும் வழி

சென்னையில் இருந்து பொன்னேரி செல்லும் வழியில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆண்டார் குப்பம் உள்ளது. ஆண்டார்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதிகள் உள்ளன.

Whats_app_banner