ஸ்ரீ பெரிய கருங்கார் உடையார் கோயில்!
ஆலங்குளம் பிரசித்தி பெற்ற விளங்கக்கூடிய அருள்மிகு ஸ்ரீ பெரிய கருங்கார் உடையார் கோயில் குறித்து இங்கே காண்போம்.
ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆலங்குளம் பிரசித்தி பெற்ற விளங்கக்கூடிய அருள்மிகு ஸ்ரீ பெரிய கருங்கார் உடையார் அய்யனார் திருக்கோயில்.
சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் எல்லை காக்கும் தெய்வமாக அய்யனார் விளங்கி வருகிறார். பூர்ணகலா, புஷ்பகலா, கருப்பண்ணசுவாமி, தட்சிணாமூர்த்தி, பைரவர், முனியப்பசாமி, இருளப்பசாமி, ராக்காச்சி அம்மன், காளி, சிவன் மற்றும் மிகவும் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதி லிங்கம் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனர்.
இவ்வாலயத்தில் மொத்தம் உள்ள 21 தெய்வங்களுக்கும் 61 பந்திகளாக வழிபாடு நடைபெற்று வருகிறது. அய்யனாருக்கு மஞ்சள் பால், பன்னீர், இளநீர், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேக ஆராதனைகள் தினம் தோறும் நடைபெற்று வருகின்றனர்.
ஆண்டுக்கு ஒருமுறை சிவராத்திரி என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான குடிமக்கள் ஆன்மீக பக்தர்கள் வருகை புரிந்து சிறப்புத் தரிசனம் செய்வார்கள். அன்றைய தினம் கிராமத்துப் பொங்கல் என்ற பெயரில் கூட்டுப் பொங்கல் விழா நடைபெறுகிறது.
வாரத்தில் சனிக்கிழமை, புதன்கிழமை ஆகிய இரு நாட்கள் அய்யனாருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது. திருமணத் தடை நீங்குதல், குழந்தை வரம் வேண்டுதல், நாள்பட்ட நோய்கள் தீர்த்து வைத்தல், முன்னோர்கள் வாக்கு பகை நீங்குதல் போன்ற சிக்கல்கள் நிவர்த்தியாவதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மனதில் நினைத்த காரியத்தைத் துண்டு சீட்டுகள் மூலம் நேர்த்திக்கடனாக மாலையாகக் கோர்த்து அய்யனாருக்கு அணிவிப்பதன் மூலம் பல்வேறு தோஷங்கள் நீங்கி வாழ்க்கை செழிக்கும் என்பது ஆன்மீக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஆலயத்தின் நுழைவு பகுதியில் இரு குதிரைகளுடன் அய்யனார் பரிவார தெய்வங்களுடன் எல்லையைப் பாதுகாத்து வருகிறார். முதன்முதலில் இவ்வாலயத்தில் ஆதி லிங்கம் தோன்றியதாகவும், அதனை நான்கு தலைமுறைகளாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வழிபாடு செய்து வருவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.