Samayapuram Mariamman Temple: ’பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அம்மன்’ சமயபுரத்தின் மகத்துவம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Samayapuram Mariamman Temple: ’பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அம்மன்’ சமயபுரத்தின் மகத்துவம்!

Samayapuram Mariamman Temple: ’பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அம்மன்’ சமயபுரத்தின் மகத்துவம்!

Kathiravan V HT Tamil
Mar 08, 2024 06:00 AM IST

”ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் மேற்கொள்கிறார். அதன்படி, சமயபுரத்தாள் இந்தாண்டு தனது பச்சை பட்டினி விரதத்தை வரும் மார்ச் 10ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 7ம்தேதி வரை 28 நாட்கள் மேற்கொள்ள உள்ளார்”

சமயபுரம் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மன்

சக்தி ஸ்தலங்களில் முதன்மையான சமயபுரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும், தாய்க்கெல்லாம் தாயான மாரியம்மன், உலகில் எங்கும் இல்லாத வகையில், தன் பிள்ளைகளான உலக மக்கள் எந்தவிதமான நோய்களும், தீயவினைகளும் அணுகாமல் சகல சவுபாக்கியங்களுடன் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக பச்சைபட்டினி என்ற கடுமையான விரதத்தை காலம் காலமாக ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை மாதங்களில் கடைபிடித்து வருகிறார். இச்சிறப்புக்குரிய பச்சை பட்டினி விரதத்தை, சமயபுரம் மாரியம்மன் ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் மேற்கொள்கிறார். அதன்படி, சமயபுரத்தாள் இந்தாண்டு தனது பச்சை பட்டினி விரதத்தை வரும் மார்ச் 10ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 7ம்தேதி வரை 28 நாட்கள் மேற்கொள்ள உள்ளார்.

சமயபுரம் மாரியம்மன், சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோயிலின் ஈசான பாகத்தில் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டார். இதனால், சமயபுரத்திலும், ஸ்ரீரங்கம் கோயிலின் மூலவரைப் போன்றே அம்பாள் சிவப்பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்புத்திருவுருவமாக, 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 இயந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மகாமாரியம்மனாக அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் விக்ரம சுகாசனத்தில், ஆயிரம் கோடி சூர்ய பிரகாசத்துடன் தங்க திருமுடி, குங்கும நிற மேனி, நெற்றியில் வைரப்பட்டை ஒளி வீச, வைரக்காதணி, வைர மூக்குத்தி என வைர ஆபரணங்களுடன், சூர்ய சந்திரனைப் போல ஜொலித்து கண்களில் அருள் ஒளி பாவித்து கருணை முகமாக, அன்னைக்கு அன்னையாய், ஆதிமுதல் ஆதார சக்தியாய் நாடி வருவோருக்கு மட்டுமின்றி, நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களைக் காக்க மஞ்சள் ஆடை உடுத்தி, திருமேனியில் வாசனை மலர்களைத் தரித்து காட்சியளிக்கிறாள். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை நோக்கி, மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், பக்தர்களை எவ்விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க மரபுமாறி அம்மனே, பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதமிருந்து கடும் தவம் புரிந்து இச்சா, கிரியா, ஞான சக்திகளை பெற்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். தெய்வம் தன் பக்தர்களுக்காக பச்சைப்பட்டினி விரதமிருந்து காப்பது உலகில் வேறு எந்த கோயிலிலும் காண முடியாத வைபவமாகும்.

அம்மன் விரதமிருக்கும் 28 நாட்களும் கோயிலில் அம்பாளுக்கு தளிகையும், அனைத்து விதமான நைவேத்தியங்களும் படைக்கப்படுவதில்லை. உண்ணா நோன்பு கொள்ளும் அன்னைக்கு, நீர் மோர், கரும்பு, பானகம், இளநீர், துள்ளுமாவு மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. அம்மன் விரதம் தொடங்கும் நாளில் தான் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கான பூச்சொரிதல் விழாவும் தொடங்குகிறது. இந்நாளில் தொடங்கி 5 வார ஞாயிற்றுகிழமைகளில் விரதமிருக்கும் அம்மனை குளிர்விக்கும் வகையில் லட்சக்கணக்கான பக்தர்கள், தலையிலும், வாகனங்களிலும் சுமந்து வரும் அனைத்து விதமான வண்ண, வண்ண, வாசனை மலர்களால் பூச்சொரிதல் விழா நடக்கிறது. 28-வது நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி, அதிலிருந்து 10-வது நாள் சித்திரை முதல் செவ்வாய்கிழமை திருத்தேர் விழா நடைபெறும். அதன்படி, இந்தாண்டு சமயபுரம் தேரோட்டம் ஏப்ரல் 16ம்தேதி நடக்கிறது.

சமயபுரம் அம்மனை அமாவாசை, பௌர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிப்படுவது சிறப்பாகும்.

ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும். 12 ராசிகளின் அதிபதியாகவும் அன்னை திகழ்வதால் அது தொடர்பான அனைத்து தோஷங்களையும் தீர்க்கிறாள். அம்மனின் சுயம்பு திருமேனியில் நவகிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாகக் கொண்டு அருள்பாலிக்கும் அம்மனை வணங்குவதன் மூலம் நவக்கிரக தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இவற்றிற்கெல்லாம் கோயிலின் மேற்கூரையில் சிற்பச்சான்றுகள் உள்ளன.

சமயபுரத்தாள் மஞ்சள் ஆடை அணிந்து பச்சைப்பட்டினி விரதம் இருக்கும் இந்நாளில், திருச்சி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள அம்பாளின் லட்சக்கணக்கான பக்தர்களும் விரதமிருந்து சமயபுரத்திற்கு பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து தாய் சமயபுரத்தாளை தரிசித்து வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபட்டுச் செல்வதும் கண்கொள்ளாகாட்சியாகும்.

சமயபுரம் மாரியம்மனுக்கு கண்ணபுரத்தாள், ஆயிரங்கண்ணுடையாள் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. அதற்கு காரணமும் உண்டு. தட்சன் யாகத்திற்குச் சென்ற, தாட்சாயணியை துாக்கி சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடிய போது, அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்ததால் இத்தலத்திற்கு கண்ணனுார் என்ற பெயர் புராண காலந்தொட்டே இருந்து வருகிறது. மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும், ஆயிரம் திருக்கண்கள் உள்ளன. அதனால், ஆயிரங்கண்ணுடையாள் என்றும் அன்னை சமயபுரத்தாள் போற்றப்படுகிறார். இது இத்திலத்தின் புராணப்பெருமையை விளக்குவதாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

எழுதியவர் – நிகாஷ்

Whats_app_banner

டாபிக்ஸ்