வரம் தரும் திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் கோயில்!
பெருமாள் நான்கு கோலங்களில் காட்சி அளிக்கும் திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் கோயில் குறித்து இங்கே காண்போம்.
நின்ற கோலத்தில் நீர்வண்ணப் பெருமாளாக, இருந்த கோலத்தில் நரசிம்மராக, சயனக் கோலத்தில் ரங்கநாதராக, நடந்த கோலத்தில் உலகளந்த பெருமாளாகக் காட்சி தருவது காணக் கிடைக்காத பெரும் பேறு ஆகும். இந்த அருள்காட்சி கிடைக்கக் கூடிய இடம் திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் திருக்கோயில்.
பெருமாளுடன் அணிமாமலர் மங்கையாகத் தாயார் வீற்றிருக்கிறார். இவருக்கு இந்த பெயரை வைத்ததும் திருமங்கையாழ்வாரே ஆகும். நரசிம்மர் என்றாலே ஆக்ரோஷமான கோலத்தில் பார்த்துப் பழகிய நமக்குச் சாந்த வடிவிலான நரசிம்மரை இந்த தலத்தில் பார்ப்பது புதிய அனுபவம் ஆகும்.
கோயிலின் தல விருட்சமாக வெப்பாலை மரம் உள்ளது. சுவாமியை வழிபட வந்த ரிஷிகள் எல்லாம் இங்கே தங்கி மரமாக உருமாறினார்கள் எனத் தலவரலாறு கூறுகிறது.
மருத்துவ குணங்கள் கொண்ட வெப்பாலை மரத்தில் ஒரு துணியில் சிறிய கல்லைக் கட்டி அதை மரத்தில் கட்டி வைத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற ஐதீகமும் மக்களிடம் உள்ளது.
வருடத்தில் எல்லா நாட்களும் கோயிலில் விழாக்கள் களைக்கட்டுகிறது. நான்கு திவ்ய தேசங்களுக்குச் சென்றதும் பலனை திருநீர்மலை வந்து வழிபட்டால் போதும். ஒவ்வொரு பெருமாளுக்கும் தனித்தனியாகப் புஷ்கரணி உள்ளது.
நடைதிறப்பு மற்றும் வழித்தடம்
இக்கோயிலின் நடை காலை 8 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். சென்னை தாம்பரத்திலிருந்து திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை செல்லும் வழியில் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த கோயில்.
பசுமை போர்த்திய மலைகளுக்கு இடையே அற்புதங்களை நிகழ்த்திய பெருமாள். அழகுறக் காட்சி தருகிறார் நான்கு கோலங்களில் ஒரே தளத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாளைத் தரிசிப்பது வாழ்வின் பெரும் பேறு என்கிறது புராணம்