சந்திரன் சாப நிவர்த்தி பெற்ற தலம்
திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் திருக்கண்ணமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது பக்தவத்சல பெருமாள் கோயில். இக்கோயில் 108 திவ்யதேசங்களில் 27வது தலமாகும். பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாக இக்கோயில் திகழ்கின்றது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பக்தவத்சல பெருமாள் திருக்கோயிலாக இந்த கோயில் விளங்கி வருகின்றது. மூலவரான பக்தவத்சல பெருமாள் பத்ராவிதப் பெருமாளாகவும், தாயார் கண்ணமங்கை நாயகியும் அருள்பாலிக்கின்றனர் .
மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சல பெருமாளை கைபிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகின்றது. சாபத்தினால் துன்புற்ற சந்திரன் இங்கு அமைந்த புஷ்கரணியில் நீராடி சாப விமோசனம் பெற்றதாகத் தல வரலாறு கூறுகின்றது.
இக்கோயில் ஐந்தடுக்கு ராஜகோபுரத்தைக் கொண்டது. ராஜகோபுரத்தை அடுத்து பலிபீடம் கொடிமரம் காணப்படுகின்றது. திருச்சுற்றில் ஆழ்வார்கள் சன்னதி, அபிஷேக வள்ளி தாயார் சன்னதி, வசந்த மண்டபம், ஆண்டாள் சன்னதி, ஹயக்ரீவ பெருமாள் சன்னதி, மணவாள மாமுனிகள் சன்னதி ஆகிய சன்னதிகளும் உள்ளன.
மூலவர் சன்னதிக்கு முன் பட்டி ராசன் சன்னதியும் உள்ளது. சாலையின் எதிர்புறம் அனுமார் சன்னதி உள்ளது. கோயிலின் தலவிருட்சமாக மகிழ மரம் அமைந்துள்ளது. தீர்த்தமாக தஷ்ண புஷ்கரணி தீர்த்தம் அமைந்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் சித்ரா பௌர்ணமி திருவிழாவும், அனைத்து சனிக்கிழமைகளில் இங்குச் சிறப்பு விழாவும் நடைபெறுகின்றன.