Sri Akilandeswari: வயிற்று வலி சிக்கலை தீர்க்கும் அம்மன்!
அகிலாண்டேஸ்வரி அம்மனை வழிபடுவோருக்கு வயிற்று வலி பிரச்னை தீரும் என்பது ஐதீகம்.
திருவள்ளூர் மாவட்டம் சோழிப்பாளையத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோயிலில் 5 அடி உயரத்திற்கு நின்ற கோலத்தில் அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருளியுள்ளார். அம்மனை வழிபடுவோருக்கு வயிற்று வலி பிரச்னை தீரும் என்பது ஐதீகம்.
அகத்தீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி தாயார் திருக்கோயில் மூலவராகவும் உற்சவராகவும் உள்ள அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். கோயிலின் தலவிருட்சம் வில்வமரமாகும். கோயிலின் பின்புறம் குளம் அமைந்துள்ளது.
கோவிலை சுற்றி விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், முருகர் வள்ளி தெய்வானை, சூரியனார் ஆகியோர் காட்சி தருகின்றனர். கால பைரவரின் வாகனமானது சிவனை நோக்கி திரும்பி வணங்குவது போன்று இங்கு வீற்றிருக்கின்றது.
இக்கோயிலில் சிவராத்திரி, பெளர்ணமி, பிரதோஷம், பங்குனி உத்திர திருக்கல்யாணம், கால பைரவருக்கு அஷ்டமி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றது. அம்மனை தேடி வந்து வழிபடுவோருக்கு இன்னல்கள் இனிதே தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோயிலின் நடையானது 7மணி முதல் பகல் 11 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். சென்னை கோயம்பேட்டிலிருந்து செங்குன்றம் வழியாக சோழவரம் சோழி பாளையம் சென்றால் அருள்மிகு அகத்தீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் தரிசனம் செய்யலாம்.