Throwpathi Amman: பிறந்த குழந்தையுடன் பூக்குழியில் இறங்கி வழிபாடு!
காப்புக் கட்டி வேண்டுதல் வைத்து விரதம் இருந்து நேர்த்திக் கடனை செலுத்தினால் அவர்களின் வேண்டுதலைத் திரௌபதி அம்மன் நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சந்திர நாராயண சுவாமி கோயிலின் மிக அருகில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் தர்மர் கோயில்.
நெல்லையிலிருந்து 56 கிலோ மீட்டர் தொலைவிலும், புளியங்குடியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் நுழைவு வாயிலில் பத்ரகாளி அம்மனும், திரௌபதி அம்மனுக்கு வடக்கு பகுதியில் தர்மர், பீமன், அர்ஜுனன் சிலைகளும் காணப்படுகின்றன.
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பூக்குழி திருவிழா 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். குழந்தைப் பேறு வேண்டுபவர்கள், தொழிலில் மேன்மை அடைய முயல்பவர்கள் இக்கோயிலின் பூக்குழி திருவிழா கொடியேற்றத்தின் போது காப்புக் கட்டி வேண்டுதல் வைத்து விரதம் இருந்து நேர்த்திக் கடனை செலுத்தினால் அவர்களின் வேண்டுதலைத் திரௌபதி அம்மன் நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.
குழந்தைப் பேறு பெற்றவர்கள் திரௌபதி அம்மன் முன்பாக குழந்தைகளைக் கடத்தி வழிபாடு செய்வதுடன் அம்மனால் கிடைத்த குழந்தையுடன் பூக்குழி திடலில் அக்னி இறங்கி வருவது இன்றும் தொடர்ந்து வருகிறது.
பூக்குழி திருவிழாவின் போது மகாபாரதத்தை நினைவு கூறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதை வேறு எங்கும் காண முடியாது என்பதும் இக்கோயிலின் தனி சிறப்பம்சமாகும்.
இதேபோன்று திரௌபதி அம்மன் தர்மர் திருக்கல்யாணம், அர்ஜுனன் தவமிருந்து பாசுபதாஸ்திரம் பெறும் நிகழ்ச்சி, திரௌபதி அம்மன் கூந்தல் முடிதல் ஆகிய நிகழ்ச்சிகளும் பூக்குழி திருவிழாவில் கண்டுகளிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்திடுவர். இக்கோயிலில் வழிபடும் பக்தர்களுக்கு மஞ்ச பொடி, எலுமிச்சம்பழமும் வழங்கப்படுகிறது.
டாபிக்ஸ்